Tuesday 1 October 2013

கரும்புள்ளியால் கவலையா? | Black Heads | Doctor Vikatan | டாக்டர் விகடன்

முகம், உணர்ச்சிகளின் பிம்பம்; பிறரிடம் நம்மை அடையாளப்படுத்துகிற சொரூபம்.  'எதுவா இருந்தாலும், என் முகத்தைப் பார்த்துப் பேசுங்க...’ என்று சொல்வது குறைந்து, முகம் கொடுத்துப் பேச மறுப்பவர்கள்தான் இன்று அதிகம். ஏனெனில், முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் (Blackheads), கறைகளுமே முக்கியக் காரணம். தினசரி முக சருமத்தைச் சரிவர பராமரிக்காமல் போனால், மூக்கின் நுனிப் பகுதியில் ஆங்காங்கே கருப்புப் புள்ளிகள் போல் அழுக்குப் படிந்து முக அழகையும் கெடுத்துவிடும்.


முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் வழிகளை விவரித்தார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் அனுஜ் சிங்.  
'இதுவும் ஒருவகை பிம்பிள்ஸ்தான். முதலில் ஒயிட்ஹெட்ஸ் எனப்படுகிற வெள்ளைப் புள்ளிதான் முக சருமத்தில் உருவாகும். அழுக்கும், தூசியும் இந்த வெள்ளைப் புள்ளியின் மேல் படிந்துக் கொண்டே வரும்போது, அது கரும்புள்ளியாக, கறையாக உருமாறிவிடும். பொதுவாக, ஒயிட்ஹெட்ஸ் தாடை பகுதியில்தான் அதிகமாக வரும்.  பிளாக்ஹெட்ஸ் கன்னம், மூக்கு பகுதியில் அதிகமாக காணப்படும்.
பொதுவாக, பருவ வயதை எட்டும்போது, இந்தப் பிரச்னை தோன்ற ஆரம்பிக்கிறது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது காற்றில் பறக்கும் தூசுக்கள், புகை இவற்றால் சருமம் பெரிதும் பாதிக்கப்படும். அதுவும், சென்னையில் ஆங்காங்கே வெட்டி வைத்திருக்கும் குழிகளிலிருந்து வரும் தூசுக்கள் சருமத்தைச் சிதைத்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.
ஒன்று அல்லது இரண்டு பிளாக்ஹெட்ஸ் இருந்தால், தரமான அழகு நிலையங்களில் சென்று நீக்கலாம். ஆனால், அதிகமாக இருந்தால், தோல் மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
இன்று பிளாக்ஹெட்ஸை நிரந்தரமாகப் போக்க,  பல நவீனமுறைகள் வந்துவிட்டன. சாதாரண ஆண்டிபயாடிக்ஸ், ஆண்டிஆக்னே (antiacne) கிரீம்ஸ், கெமிக்கல் பீலிங், லேசர் முறைகள் என பல சிகிச்சை முறைகள் வந்து விட்டன. பெரும்பாலும் மாத்திரை மற்றும் கிரீம் மூலமாகவே பிளாக்ஹெட்ஸை மறைய செய்துவிடலாம்.  ஆனால், முற்றிலும் போக்க, ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை ஆகலாம்.
அடையார் டிவிங்கிள்ஸ் பியூட்டி பார்லரின் அழகுக்கலை நிபுணர் ஸ்ரீதேவி, பார்லரில் பிளாக்ஹெட்ஸ் அகற்றும் முறையைக் கூறினார்.
''முதலில் முகத்தில் கிளென்சர் தடவி, சிறிது உலர்ந்த பிறகு கழுவ வேண்டும். பிறகு ஒரு தரமான ஸ்கரப்பை பயன்படுத்தி முகத்தின் டி ஜோன்ஸ் க்ரீமை நெற்றி, மூக்கு மற்றும் தாடைப் பகுதிகளில் தடவி, கழுவ வேண்டும். க்ளென்சரால் நீக்கப்படாத அழுக்கை ஸ்க்ரப் செய்வதன் மூலம் எடுத்துவிடலாம். பிறகு, முகத்தில் மீதம் இருக்கும் அழுக்கைப் போக்கவும், ஒயிட்ஹெட் மற்றும் பிளாக்ஹெட்ஸைத் தளர்த்தவும், முகத்துக்கு ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 நிமிடத்துக்குப் பிறகு, ஊசி வடிவில் இருக்கும் ரிமூவரைப் பயன்படுத்தி ஒயிட்ஹெட் மற்றும் பிளாக்ஹெட் ஒவ்வொன்றாக நீக்க வேண்டும். இவை தளர்ந்த நிலையில் இருக்கும் ஒயிட்ஹெட்ஸ் மற்றும் பிளாக்ஹெட்ஸை மிக எளிமையாகவும் எந்த ஒரு தழும்பு இல்லாமலும் நீக்க உதவும். அனைத்து ஒயிட்ஹெட்ஸ் மற்றும் பிளாக்ஹெட்ஸை நீக்கிய பிறகு டோனரால் முகத்தைக் கழுவ வேண்டும். டோனர், முகத்தின் திறந்த துளைகளை மூட உதவும். கடைசியில் ஐஸ் பேக்கிங் (ice padding) கொடுக்க வேண்டும்' என்கிற ஸ்ரீதேவி, இந்த முறையை வீட்டிலேயே செய்து கொள்ள வழி சொன்னார்.


''பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தரமான ஸ்கரப்பை முகத்தில் தடவி 10, 15  நிமிடங்களுக்குப் பிறகு கழுவுங்கள். கோதுமை மாவையும் அரைத்த சர்க்கரையும் ஜெல் போல் கலந்து ஸ்கரப்பாகப் பயன்படுத்தலாம். இது இயற்கையானதும் ஆரோக்கியமானதும் கூட. ஆனால், இதை மெதுவாகச் செய்ய வேண்டும். இல்லையெனில், முகத்தில் காயம், தழும்பு ஏற்படலாம்.' என்றார்.
செ. கிஸோர் பிரசாத் கிரண்.
படங்கள்: எஸ்.பி. ஜெர்ரி ரினால்டு விமல்
 வராமல் தடுக்க வழிகள்!
 சரும சுத்தம் மட்டுமே பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்க வழி. வெளியில் சென்றுவிட்டுத் திரும்பியவுடன் உடனடியாக முகத்தை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவவேண்டும்.
 அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவுவதும் நல்லது.
 இந்தப் புள்ளிகளை கைகளால் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. அந்த இடமே மறையாத தழும்பாகிவிடும்.  
  தேவையான அளவு தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 வாகனம் ஓட்டும்போது முகத்தை துணியால் மூடி பாதுகாப்பது நல்லது.



Link:

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives