Tuesday 2 October 2018

மஞ்சள் | 96

        இந்தப் பதிவு, 96 படம் வெளிவருவதற்கு முன்பு எழுதப்பட்டது.      
        
        ஒவ்வொரு காதலர்களுக்கும் சில பிரத்யேகமான சொல்லோ வாக்கியமோ இருக்கும். இருவரும் மகிழ்ச்சியாக இருந்தாலோ அல்லது சண்டை ஏற்பட்ட நிலையிலிருந்தாலோ, அந்தப் பிரத்யேக சொற்கள் அவர்களுக்குப் பயன்படும். 
அவை மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கும். அல்லது சண்டையை நிதானப்படுத்தும். எதனால் சண்டை என்றே தெரியாமல் காதலன் இருக்கும்போது, அந்தப் பிரத்யேக சொற்களைக் காதலியிடம் பயன்படுத்தினால், எப்போதும் அச்சொற்களைக் கேட்டு மகிழ்ச்சியடையும் காதலி, இப்போது மட்டும் கடுப்பாகி, என்ன பிரச்சனை என்பதை மறைமுகமாகக் கூறும் குறைந்தபட்ச சந்தர்ப்பத்தையாவது அச்சொற்கள் ஏற்படுத்திக்கொடுக்கும்.
இப்பிரத்யேகச் சொற்களைப் போலவே, 96 படத்தின் களத்திற்கும் வலிமை அதிகம். பிரிந்த முந்தைய காதலர்கள், பல வருடங்களுக்குப் பிறகு நண்பரின் திருமணம், பள்ளி/கல்லூரி ரீ-யூனியன் போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும்போது பல சுவாரஸ்யமான நொடிகள் ஏற்படுவதுண்டு. அந்நொடிகளோடு பெரும்பாலானோர் தங்களை எளிதாகப் பொருத்திக்கொள்வர். காதல் சார்ந்த களத்தைக் கொண்டுள்ள படங்களை, இதுவே வெற்றிப்பெறச் செய்கின்றது.
டிரைலரின் தொடக்கத்திலே 10th ‘C’ செக்க்ஷனின் காதலனும் காதலியும் மழையோடு அறிமுகமாகுகிறார்கள். ராம், மற்ற ‘ராம்’களைப் போல இருந்துவிடாமல் கறுப்பாக இருப்பது புதுத் துவக்கம். ராம் என்பதை ஜானுவின் பக்கத்திலும், ஜானு என்பதை ராமின் பக்கத்திலும், இடம் மாறித் தோன்றுவது, இன்னார்க்கு இன்னார் என்ற fairytale  உணர்வைக் கொடுக்கிறது.
          இதே காட்சியில் ஜானு, மழையைப் பார்த்து அதன் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறாள். அப்படி இந்த மழையில் என்ன இருக்கிறது என்ற குழப்பத்தோடு ராம் அந்த மழையை ஏளனமாகப் பார்க்கிறான். அவனுக்கு மழையின் அழகெல்லாம் புரியவில்லை தெரியவுமில்லை. அதனால், அவனுக்குத் தெரிந்த ஒரே அழகாகிய ஜானுவை நோக்குகிறான்.
பிறகு, யாரும் இல்லாத நேரத்தில், ராம் தங்கள் இருவருக்கும் பொதுவான தோழியிடம், ஜானு மேல் தான் வைத்திருக்கும் காதலை கூறிவிடுகிறான். எதிர்பார்த்தப்படியே தோழி பயப்படுகிறாள்.

        ஜானுவுக்கு இது தெரிந்து, அவளுக்கும் ராம் மீது காதல் மலர்கிறது.
        காதலர்கள் கண்களாலே பேசிக்கொள்வார்கள் என்பது தெரிந்த வழக்கம். அது போல ராமும் ஜானுவும் சொற்கள் இல்லாமலே பள்ளியில் காதலிக்கிறார்கள். அவர்கள் ‘90களில் படிப்பதால் மொபைல் கிடையாது. பார்க்க வேண்டும், பேச வேண்டுமென்றால் பள்ளி தான் அவர்களுக்கு ஒரே தீர்வு. அதுவும் மற்ற நண்பர்களுக்குத் தெரியாமல், குறிப்பாக ஆசிரியர்களுக்குத் தெரியாமல் காதலிக்க வேண்டும்.  நல்லவேளை, ஜானு expressiveஆக இருந்ததால், அவளது வசீகரமான பாவனைகளில் ராம், மெய் மறந்து அவளைக் காதலிக்கிறான்.
     ஜானுவுக்குப் பயமெல்லாம் இல்லை. வெளிப்படையாகச் சிரிப்பாள், கோபப்படுவாள், ராமிடம் விளையாடுவாள், கொஞ்சம் வெட்கப்படுவாள், மனதில் நினைப்பதை பேசிவிடுவாள். ராம் நேர் எதிர்மறை. Introvert. கூச்ச சுபாவக்காரன். ஜானுவை விட அதிகமாக வெட்கப்படுவான். ஆனால் ராமின் முகத்தில் பெரும்பாலும் உணர்ச்சியேயிருக்காது. அவனுள்ளேயே அவனது அத்தனை உணர்ச்சிகளும் சொற்களும் புதைந்துக் கிடைக்கும். 
இப்படி யோசிக்கும்போது தான், 96 படத்தின் அனைத்துப் பாடல்களையும்(ஒன்றைத் தவிர) பாடகர் சின்மயி பாடியிருக்கிறார் என்பதைப் பார்த்தேன். VTV Jessie போலவே ஜானுவுக்கும் பாடகர் சின்மயி தான் குரல் கொடுத்திருக்கவேண்டும். இதை வைத்துப்பார்க்கும் போது ஜானு(‘ஜானகி’?) ஒரு பாடகியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆகையால் தான் நாம் ஜானுவை, படத்தின்  பாடல்கள் வழியாகத் தெரிந்துக்கொள்ளலாம்.
தான் அடக்கி வைத்திருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ராமிற்கு ஒரு வடிகால் தேவைப்பட்டிருக்கலாம். அதனால் தான் பின்னாளில் ராம் ஒரு போட்டோகிராபராக மாறுகிறார். கேமரா மூலம் தனது மன அலைகளை மொழிபெயர்க்கிறார். ஆகையால் ராமை படத்தின் cinematography மூலம் நாம் புரிந்துக்கொள்ளலாம்.
இதனால் தான், பாடல்கள் ஜானுவைப் போல இனிமையாகவும், படத்தின் காட்சிகள் ராமை போல மென்மையாகவும் தோன்றுகிறதோ என்னமோ.
காதல் ஏற்படுவதற்கும் காதலர்கள் பிரிவதற்கும் ஒரு காரணம் போதும். அப்படி ஏதோ ஒரு காரணத்தால், ஜானுவும் ராமும் பள்ளிப்பருவத்தில் பிரிகிறார்கள். பின்பு ராமின் வாழ்க்கை என்னவாக மாறுகிறது என்பதை டீஸரின் முதல் காட்சியே சொல்லிவிடுகிறது.


அவனது வாழ்க்கை தலைகீழாகிறது. ஆம். இவள் தான் வாழ்க்கை. இவளோடு மட்டுமே என் வாழ்க்கை. இவள் தான் எதிர்காலம். இவளோடு மட்டுமே எனது எதிர்காலம் என்று யோசித்து அந்த ஆசையை வளர்த்துக்கொண்டேயிருந்த காதலனுக்கு, அவளே இனியில்லை என்று ஏற்படும் நிலையில் என்னவாகும்? வாழ்க்கை தலைகீழாகத் தான் மாறும்!
பிறகு தன்னையும் தனது உணர்ச்சிகளையும் மொத்த வாழ்க்கையையும் சமநிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கொண்டே இருக்கிறான் ராம்.

தனது ஒரே கருவியான கேமரா மூலம் ஊர் ஊராகச் சென்று தன்னையும் தனது வாழ்க்கையையும் மீண்டும் கண்டுபிடித்து அதை மீட்டெடுக்க முயற்சிக்கிறான்.

தனது கேமரா முன்பு மட்டுமே தனது அடிமனதின் உண்மை உருவத்தைக் காண்பிக்கிறான். இதன் மூலம் கேமராவும் அவனும் எந்த அளவுக்கு ஒன்றிவிட்டார்கள் என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால், அவ்வளவு வலிமையான அவன் கேமராவால் கூட, அவளது நினைவுகளின் வீரியத்தைக் கொஞ்சம் கூடக் குறைக்க முடியவில்லை. சொல்லப்போனால் ஒரு விதமான பிரபஞ்ச சக்தியையும் ஆற்றலையும் முன்பு கொடுத்துக்கொண்டிருந்த  அவளும் அவளது அதே நினைவுகளும் தான் இப்போது அவனை எதிர்மறையான திசையில் இழுத்துக் கொண்டே போகின்றன.
‘இவள் தான் எனது எதிர்காலம்’ என்று முன்பு யோசித்த ராமிற்கு, பிற்காலத்தில் அவளே பாலைவனத்தின் புழுதி போல் அவனது எதிர்காலப் பார்வையை மறைக்கிறாள். சுவாசிப்பதைக் கூடக் கடினமாக்குகிறாள்.

கரடு முரடான பாதைப் போல் அவளது நினைவுகளும் வாழ்கையின் அடுத்தக் கட்டத்திற்கு அவனை நகர விடாமல் தடுக்கின்றன.

இப்படி அவளைத் தாண்டி எந்த ஒரு பெண்ணையும் நினைக்காமல், திருமணம் செய்து கொள்ளாமல், ராமின் வாழ்க்கை Sine வேவ் போலக் கழிய, நரைமுடி தாடியில் பரவ, அவனது பள்ளி ரீ-யூனியன் நடக்கபோகிறது. இருவரும் கலந்துக் கொள்வார்கள் என்பது அவ்விருவருக்குமே தெரியும். சொல்லப்போனால் அவ்விருவருமே ஒருவரையொருவர் காண வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகக் கூட ரீ-யூனியனில் கலந்துக்கொள்ளலாம். இவ்வளவு வருடங்கள் கழித்து அவர்களின் சந்திப்பு எப்படியிருக்கும் என்று யோசிக்கும் வேலையில்,
கையில் ஷாப்பிங் பேக்குகளோடு ஜானு மீண்டும் அறிமுகமாகிறாள்.

‘மஞ்சள்’ உடை அணிந்து வருகிறாள். இதனால் ஜானு ‘சூரியனாக’ வருகிறாள் என்று வைத்துக்கொள்ளலாம்.
பெரும்பாலும் காதலன் தனது காதலியை நிலவோடு ஒற்றுமைப் படுத்தியே வர்ணிப்பது வழக்கம். ஆனால், பளிச்சென்று ஒளி வீசாமல், சற்று வலிமை குறைந்த ஒளியை வீசி, அதுவும் சொந்தமாக ஒளியைத் தராமல், எப்போதும் சூரியனிடமே தன்னுடைய ஒளியை வாங்கி, சூரியனிடம் ஒருவிதமாக அடிமைப்பட்டு, இரவில் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலவை, காதலன் தனது காதலியாக வர்ணிப்பது ஒரு வகையான ஆணாதிக்க மனோபாவம். இதைத் தகர்த்தெறியும் வகையில் ஜானு மஞ்சள் ஆடையில் சூரியனாக ராமின் வாழ்க்கையில் மீண்டும் வரவிருக்கிறாள்.

இந்தக் காட்சியில் ஜானுவுக்கு அருகிலிருக்கும் மெழுகுவர்த்திகளைப் பாருங்கள். அவை எரிந்துக்கொண்டிருக்கின்றன. இது ஜானுவின் பகுதி. அதே அந்தப்பக்கம் இருள் நோக்கி வானம் காட்சியளிக்கிறது. அங்குள்ள மெழுகுவர்த்திகள் அணைந்து கிடக்கின்றன. இது ராமின் பகுதி. பிரகாசமான சூரியனாக மஞ்சள் உடையில் வரும் ஜானு ராமின் பகுதியை நோக்கி நகர்கிறாள். இருண்டுக் கிடக்கும் ராமின் பகுதியை ஜானுவின் வெளிச்சம் என்ன செய்யப்போகிறது என்பதிலே கதை நகரலாம்.
ஒருவேளை ஜானுவின் ஒளி ராமை  எரித்துவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது. ஜானுவின் மீதி உடையும் காலணியும் குளிர்ச்சியைக் குறிக்கும் நீல வண்ணத்தைக் கொண்டுள்ளன. ஆகவே ஜானு சரி சமமான ஒளியையும் வெப்பத்தையும் குளிர்ச்சியையும் கொண்டவளாவாள். கவலைப்படவேண்டாம்.
’96 பேட்ச் ரீ-யூனியன் மீட் ஆரம்பமாகும் நிலையில், ராமின் நண்பர் ராமிடம் ஜானுவந்திருப்பதாகக் கூறுகிறார். ஜானுவின் தோழியும் ராம் வந்திருப்பதாக ஜானுவிடம் தெரிவிக்கிறார்.


வருவது தெரிந்திருந்தாலும் பழைய அழகிய நினைவுகளோடு இவ்வளவு வருடங்கள் கழித்து எப்படி முகத்துக்கு நேராகச் சந்திக்கப் போகிறோம் என்ற குழப்பம் இருவரின் முகத்திலும் வெளிப்பட்டுவிடுகின்றன.
பல வருடங்கள் கழித்து இரண்டு உயிர் நண்பர்கள் சந்தித்தால் கூட அரை மணி நேரத்திற்கு அப்பால் பேச எதுவும் இருக்காது என்பர். காரணம் அந்த நண்பர்கள் இருவரும் அப்போதைய சூழ்நிலையால், காலகட்டத்தினால் மற்றும் குணாதிசயத்தால் நட்பானவர்கள். வருடங்கள் ஓட இந்த மூன்று தன்மைகளும் அவ்விரு நண்பர்களுக்குப் பெருமளவில் மாற்றமடைந்திருக்கும். ஆகையால் பழைய நண்பர்கள், பழைய நண்பர்களாகவே தேங்கிவிடுவர். இதைப் பெரும்பாலும் பள்ளி நண்பர்களிடையே அனுபவிப்போம். நண்பர்களுக்கே இந்தக் கதியென்றால், பிரிந்த பள்ளிக் காதலர்களின் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.


பல வருடங்கள் கழித்து, பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளாததால், பேசுவது குறைவாகவே இருக்கக்கூடும். அதுவும் ராமை பற்றித் தான் நமக்குத் தெரியுமே. ஜானுவாகப் பேசினால் தான் உண்டு. ஒருவருக்கொருவர் பார்வையால் மட்டுமே பேச முயற்சிக்கிறார்கள்.

ஜானு தனது வெளிப்படையான முகபாவனைகளால் மீண்டும் ராமை ஆட்கொள்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் பேச தொடங்குகிறார்கள். பேச்சு அதிகமாகி இரண்டு பேரும் சற்று இயல்பான நிலைக்கு வருகிறார்கள். ஜானு தான் quite bold & outspoken ஆச்சே, அதனால் அவள் எளிதாக இயல்புநிலைக்குத் திரும்பிவிடுகிறாள். ஆனால் நம் ராம் எப்போதும் போலக் கொஞ்சம் nervous ஆகவே தெரிகிறார். இருப்பினும், இந்த ரணகளத்திலும் அவனால் ஜானுவை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை.
Count-down டைமர் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பது கொஞ்ச நேரம் தான் என்பதை இருவரும் அறிவர். அதனால் தான் ராம் தனது பார்வையை ஜானுவின் விழியிலிருந்து சற்றும் நகற்றாமல் அவளையே ரசித்தபடியே இருக்கிறான். ஜானுவும் தனது பங்கிற்கு அவன் மீது பாசத்தைக் காட்டுகிறாள். பழைய பந்தம் மீண்டும் புத்துணர்ச்சி பெற ஒரு கட்டத்தில் ஜானு ராமின் இதயத்தில் கை வைக்கிறாள்.
இது தான் ராம் மற்றும் ஜானுவுக்கான special & unique moment.
ஆனால் இது புதிதல்ல. பள்ளியில் படிக்கும்போது கூட இதே நிகழ்வு நடந்திருக்கிறது.
டிரைலரில் இந்தக் காட்சி முடிந்து அடுத்தக் காட்சியிலேயே உயிரியல் ஆசிரியை ஒருவர் இதயத்தைப் பற்றி வகுப்பு எடுக்கயிருப்பார். எனக்குத் தெரிந்து அந்த ஆசிரியை நமது ராமை வகுப்பெடுக்கச் சொல்லலாம். ஜானு குடியிருக்கும் மற்றும் ஜானுவே தொட்ட இதயத்தைப் பற்றி, உயிரியலிலே சொல்லாதவற்றையெல்லாம் பாடம் எடுக்கும் திறன் ராமிற்கு ஜானுவால் ஏற்பட்டிருக்கும்.
ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஜானு அதே வகையில் மீண்டும் கைவைப்பது, ராமை ஒரு வழி ஆக்குகிறது. அதை மொழிபெயர்க்க வார்த்தைகளால் முடியாது.

ராமின் உணர்வு ஜானுவின் கைவழியே ஜானுவுக்கு உள்ளேயும் செல்கிறது. அதை அவள் முகமே காட்டிவிடுகிறது. இதெல்லாம் பார்த்து தான் இருவரின் நண்பர்களும் பயப்படுகின்றனர்.


இந்தப் பயம் தான் ஜானுவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவளுக்கென ஒரு தனிக் குடும்பமும் வாழ்கையும் இருக்கின்றது என்பதைச் சற்று உறுதிசெய்கிறது. இதே காட்சியில் ஒரு கறுப்புக் கம்பியைச் சுற்றி LED பல்புகள் சூழ்ந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. அதாவது ராமின் இருளை ஜானுவின் ஒளி ஆக்ரமிக்க ஆரம்பித்துள்ளது என்று பொருள் கொள்ளலாம்.
நாம் ராமின் சட்டைகளைக் கவனித்தால், பெரும்பாலும் அவனது மனதின் இருளைப் பிரதிபலிக்கும் dull coloured black shaded சட்டைகளையே அவன் அணிகிறான். அவனது தாடியும் அந்த இருளை வெளிவராமல் ஒரு வேலி போலக் காக்கின்றது.


ஆனால் ஜானுவுக்கு உண்மையான ராமே இப்போது வேண்டும். அதாவது அவனின் இருண்ட பக்கங்களைப் பார்த்துவிட வேண்டும். அதனால், அவனது வேலியான தாடியை எடுக்க வைக்கிறாள். இத்தனை ஆண்டுக் காலங்களில் யார் யாரோ பல்வேறு வகையில் ராமை தாடி எடுக்குமாறு சொல்லியிருப்பார்கள். ஆனால் வேலியை எடுத்தால் அவனது வலியும் உண்மையும் நினைவுகளும் அவனைவிட்டு வெளியே சென்றுவிடுமே என்ற பயம். அதனால் தான் எடுக்காமல் இருந்தான். ஆனால் இப்போது கேட்பது ஜானு ஆச்சே. எடுத்துத் தானே ஆக வேண்டும். ராமிடம் இதுவரை எதையும் ஜானு கேட்டிருக்கமாட்டாள். இதைத் தவிர ஜானுவுக்காக ராமால் என்ன செய்துத்தர முடியும்.
தாடி எடுக்கப்படுகிறது. எடுத்த பின்பு தனது உண்மை முகத்தைக் காட்ட ராம் தயக்கப் படுகிறான். பின்பு நரைத்த முடிகள் மறைகின்றன. இப்போது ராமின் சட்டையும் black shade இல் இருந்து grey shadeக்கு மாறிவிட்டது. ராமின் இருண்ட பக்கங்களை அறியும் ஜானுவின் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது.
இரவு நேரம். ராமின் இருண்ட இதயத்தை மாற்ற நினைக்கும் பிரகாச ஒளியான ஜானு. இருவரும் சென்னையை உலா வருகின்றன. மெட்ரோ இரயிலுக்காகக் காத்திருக்கும்போது டீஸரில் வரும் காட்சி இது.


கண்ணாடியிலிருக்கும் இருவரின் பிரதிபலிப்பைப் பார்க்கும் போது, ரயில் வருகிறதா என்பதை ராம் பார்க்கிறான். ஜானு ராமைப் பார்க்கிறாள். இருவரும் பழைய பிணைப்போடு புதிய குழப்பங்களோடு இருக்கிறார்கள். ஆனால் இருவருக்கும் எதிரில் வாழ்க்கை என்ற இரயில் தங்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. சிறு வயதில் ஜானுவிடமிருந்த அந்தக் காதல் விளையாட்டுகள் இன்னும் அவளிடமிருந்து மறையவில்லை. ஏன், ராமின் தாடியை எடுக்க வைத்ததும் ஒரு வித காதல் விளையாட்டு தான். ராமின் மீது தனக்கிருக்கும் controlயை மீண்டும் ஜானு புதுப்பித்துக்கொண்டாள். விளையாட்டுகள் தொடர்கின்றன.
மெட்ரோ இரயில் காலியாக இருப்பினும் இருவரும் நின்றே பயணிக்கிறார்கள். ஜானு கண்ணாடியில் தெரியும் ராமின் கைவிரல்களை நோக்கி தனது கையை நகர்த்துகிறாள். ராம் ஜானுவின் விரல்கள் அருகில் வருவதையறிந்து தனது விரல்களைக் கீழே கொண்டுவருகிறான். அதைக் கண்ணாடியில் பார்க்கும் ஜானு இப்போது ராமை நேரடியாகப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்கிறாள். ராம் வெட்கப்பட்டுக் கீழே பார்க்கிறான். இது போன்ற காட்சிகளில் பெரும்பாலும் ஆண்கள் விளையாட பெண்கள் வெட்கப்படுவார்கள். Bore அடிக்கும். ஆனால், இங்கு role change செய்து அதே காட்சி நடப்பதால், பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

ஜானுவின் காதல் விளையாட்டுகள் இதோடு நின்றுவிடவில்லை. கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் கூட அவள் பல்வேறு வடிவங்களில் ராமோடு காதலால் விளையாடுகிறாள். ராமும் அதை அனைத்தையும் ரசித்து மகிழ்கிறான்.
இந்தக் காட்சியில் ஜானு மோதிரம் அணிந்திருக்கும் விரல் பெரும்பாலும் திருமணம் அல்லது நிச்சயதார்த்த மோதிரம் அணியும் விரலாகும்.


அதாவது சுண்டு விரலுக்கு அருகிலிருக்கும் விரலின் நரம்பு இதயத்தோடு இணைந்திருக்கும் என்பது ரோமர்களின் நம்பிக்கை. திருமணத்தின் சாட்சியாக இருக்கும் மோதிரத்தை, இதயத்திற்கு நெருக்கமான இந்த விரலில் அணியும் பழக்கம் பிற்காலத்தில் உலகம் முழுவதும் பரவியது. ஜானுவும் இதே விரலில் மோதிரத்தை அணிந்திருப்பது அவள் திருமண வாழ்க்கையை மீண்டும் உறுதிசெய்கிறது.
இதனால் தான் என்னமோ,  ராம் ஜானுவைப் போலச் சகஜமாகப் பழகவில்லை. அவனால் பழகவும் முடியவில்லை. ஓர் இடைவெளியோடு தான் ஜானுவோடு பழகுகிறான். மெட்ரோவில் அவனது விரல்கள் கூட அவள் மீது பட்டுவிடக்கூடாது என்று கவனமாகயிருக்கிறான். இந்த இடைவெளி உடலளவில் மட்டும் ராமிற்கு இல்லை. மனதளவிலும் ஜானுவோடு ஓர் இடைவெளியோடவேயிருக்க விருப்பப்படுகிறான்.


இருவரும் ரோட்டில் நடந்து வரும்போது கூட, அதன் பிரிவுக் கோடு இருவருக்கும் நடுவில் சரியாகச் செல்வதைப் பார்க்கலாம்.



அந்தக் கோடு தான் ராம் உருவாக்கிய இடைவெளி. கோட்டிற்கு அருகில் கூட வராமல் அவன் நடக்கிறான். ஆனால் ஜானுவோ அந்தக் கோட்டைத் தாண்டி அவனது பகுதிக்குள் வர முயற்சிக்கிறாள். அதவாது, ராமின் இடைவெளியைத் தாண்டிச் சென்று அவனது இருண்ட பக்கங்களை அனைத்தையும் பார்க்க நினைப்பதே அவளது விருப்பம். 
இப்படி இடைவெளியைப் பராமரிக்கும் ராம், டிரைலரின் ஒரு காட்சியில், ஜானுவின் கை மீது தனது கையை வைப்பது போல வருகிறது.


இது எதனால் நடக்கிறது என்பது தெரியவில்லை. முக்கியமாக இதில் ஜானு அணிந்திருக்கும் உடை, வேறு எந்தக் காட்சியிலும் வரவில்லை.
அடுத்த நபரை தொட்டோ தொடாமலோ பழகுவது அவரவர் விருப்பம். ஆனால் நீங்கள் தொடப்போகும் நபர் அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் இருக்க வேண்டும். Uncomfortable ஆகப் பீல் பண்ணக் கூடாது. முக்கியாமாகத் தான் பழகும் முறை தான் சரி. தனக்கு எதிராக விளங்கும் முறைகள் அனைத்தும் தவறு என்று radicalize செய்யாமலிருக்க வேண்டும். மதத்தில் ஆரம்பித்து Sexual Orientation வரை, சட்டத்திற்கும் சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்கும் personal choices அனைத்திற்கும் இந்தக் கருத்து பொருந்தும்.
இதை ஜானுவும் ராமும் நன்கு அறிவார்கள். இருவரும் மற்றொருவரின் துணையில் comfortableலாகவே இருக்கிறார்கள். வரும் காட்சியே இதற்குச் சாட்சி.
ராம் எதையோ வருத்தமாகக் கிட்டத்தட்ட அழும் தொனியில் சொல்கிறான். அதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்த ஜானுவின் முகம் மாறுகிறது.
நமது சமூகம் ஆண்கள் என்றால் இதெல்லாம் செய்யக்கூடாது. பெண்கள் என்றால் இதெல்லாம் பண்ணக்கூடாது என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறது. அப்படித் தான்,  ஆண்கள் அழக்கூடாது என்றும் பெண்கள் அலங்காரம் பண்ணிக்கொள்வது கட்டாயமென்றும் ஒரு மறைமுகக் கட்டளையை விதித்துள்ளது. இந்தக் காட்சியில் இந்த இரு விதிமுறைகளும் உடைக்கப்படுகின்றன. இங்கே ராம் அழுகிறான். ஜானு முடி களைந்து காட்சியளிக்கிறாள். ஓர் ஆண் அழுவது அதுவும் இன்னொருவர் முன் அழுவது அதிலும் ஒரு பெண் முன் அழுவது இந்தச் சமூகத்தில் குற்றமாகப் பார்க்கப்படுகிறது(“பொண்ணு போல அழாத”). அதுபோல, ஒரு பெண் சிகை அலங்காரமில்லாமல் இயல்பான தொனியில் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் மட்டுமேயிருக்கிறாள். 
Both men and women are choosy with people in such situations. ஆனால் இங்கு இருவரும் இயல்பாக comfortableலாகவே இருக்கின்றன. இதுவே ஜானு மட்டும் ராமின் பந்தத்தின் எடுத்துக்காட்டாகும்.
ராமின் சில இருண்டப் பக்கங்களைப் படித்து அழுகிறாள், ஜானு. ராமை நினைத்து வேதனைப்படுவதா பெருமைக் கொள்வதா அல்லது காதலிப்பதா என்று தெரியாமல் மீண்டும் ராமின் இதயத்தைத் தொடுகிறாள்.


ஜானு இல்லாத சென்னையே ராமிற்குத் தெரியும். இப்போது அவ்விடங்களில் ஜானுவும் ராமோடு இருக்கிறாள். இங்கு ஜானு இருந்தாள் என்ன செய்திருப்பாள். இங்கு ஜானு இருந்தாள் என்ன சொல்லிருப்பாள் போன்ற ராமின் பல வருடக் கற்பனைக் கேள்விகளுக்கு ஜானு தனது பல்வேறு உணர்ச்சிகளில் விடையளித்துக் கொண்டே வருகிறாள்.
ரீ-யூனியன் இடத்திலிருந்து ஜானுவின் அறைக்கு ஒரு நடை. பின்பு அங்கிருந்து கிளம்பி இன்னொரு நடை. இந்நடைகளோடு இவர்களின் உரையாடல்கள் ஒருப்பக்கம் போய்க்கொண்டிருக்க, மழை பொழிகிறது. மழை ராமிற்கும் ஜானுக்கும் எப்போதுமே ரொம்ப special. இந்த மழை இருவரின் வெளித்திரையையும் தனது நீரால் அழித்து ஒரு raw & original stateக்கு இருவரையும் நகர்த்திவிடுகிறது.


இப்போது இருவரின் உடைகள் மட்டுமல்ல இருவரின் உள்ளங்களும் ஈரமாகிவிட்டன. ராம் ஜானுவை அவனது வீட்டிற்கு அழைத்து வருகிறான். இதுவே படத்தின் கடைசிக் கட்டமாக இருக்கும்.


ஒருவழியாக ராமின் உண்மையான இருளுக்கு ராமே ஜானுவை அழைத்து வந்துவிட்டான். ஜானு தனது ஒளியோடு உள்ளே நுழையவிருக்கிறாள். ராம் வலது காலை எடுத்துவைத்து உள்ளே வருமாறு ஜானுவிடம் வேண்டுகிறான். பல தடவை இந்தக் காட்சியை ராம் தனது மனதுக்குள்ளேயே rehearse செய்திருப்பான் போல. ராம் தனது வேண்டுகோளை சொன்னவுடன் ஜானு சற்று பயந்து ஒரு சிறு நடுக்கம் காண்கிறாள். அந்த நடுக்கத்திற்குக் காரணம் ராமின் குரலா அல்லது இருளா என்பது ஜானுவுக்குமட்டுமே தெரியும்.
  Countdown டைமரின் நேரம் கிட்டத்தட்ட முடியப்போகிறது. இருவரும் ஈரமான துணியிலிருந்து மாறிவிடுகிறார்கள். ஜானுவே ராமின் துணியைக் கேட்டு வாங்கி அணிந்திருப்பாள் என நினைக்கிறேன். மீண்டும் உரையாடல்கள் தொடர்கின்றன.


இப்போது நடக்கும் உரையாடல் சற்று இலகியதாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அது நடந்துக்கொண்டிருக்க, தரையில் அமர்ந்து இருவரும் உணவு உண்கிறார்கள். அப்போது ஜானு, “ஆனா, இப்ப இந்தச் சமயத்துல ஒன்னு சொல்லனும்னு தோணுது. ஆனா சொல்லமாட்டேன்” என்று செல்லமாகச் சொல்ல, ராம் சற்று யோசித்து உடனே தனது தட்டை கீழே வைத்துச் செய்கை மூலம் தனது பதிலை சொல்கிறார்.


அந்தச் செய்கைக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்குமென நினைக்கிறேன்.
1. “நீ சொல்லலாம் வேண்டாம். எனக்கே தெரியும்.” 
     அல்லது
2. “எனக்கு எதுவும் வேண்டாம். நான் இப்படியே இருந்துவிடுகிறேன்.”
இதில் எது ராமின் பதில் என்பது ராமிற்கு மட்டுமே தெரியும்.
இதேவேளையில் தான் மின் தடைப்படுகிறது. அதாவது ராம் செய்கையால் பதிலளித்த உடனே இது நடக்கிறது. விளக்குகள் அணைந்துவிடுகின்றன.
இதை, “நான் உனது வாழ்க்கையில் விளக்கேத்தட்டுமா?” என்று ஜானு கேட்க, “வேண்டாம்” என ராம் பதிலளிப்பதால், இருள் மறுபடியும் சூழ்ந்து கொள்கிறது என்றே புரிந்து கொள்ளவேண்டும் போலிருக்கிறது.


தனது இருள் எவ்வளவு கொடுமையானது என்பது ராமிற்கு நன்றாகவே தெரியும். அதிலும் இப்போது தனது இருளில் சிக்கியிருப்பது ராமின் எல்லாவுமாகிய ஜானு. அவசர அவசரமாகப் பதறியடித்து ஒரு emergency லைட்டை எடுத்து வருகிறான் ராம்.

பிறகு ஜானுவைப் பார்த்து ஒருவிதமான அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் திகைத்து நிற்கிறான். அது என்னவாக இருக்கும் என்பதை உங்களைப் போல நானும்  அக்டோபர் 4ஆம் தேதியன்று படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொள்ள முடியும்.
டைமரின் நேரம் முடிந்துவிட்டது. ராம் தனது old version classic புல்லெட்டில் ஜானுவை ஏற்றிக்கொள்கிறான். இருவரும் ஆரம்ப இடத்திற்கே மீண்டும் செல்கின்றனர்.




இருவரின் உடையையும் பாருங்கள். ராம் மீண்டும் அவனது இருளுக்குச் சென்றுவிட்டான். ஜானுவும் ராமின் இருளை அணிந்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலை. இந்த இருள், தற்காலிகமா நிரந்தரமா என்பது அவரவருக்கே தெரிந்த விடை.

இத்திரைப்படம் வெளிவந்த பின்னர் இதை ‘காதல் தோல்வி’க்கான படம் என்று முத்திரைக் குத்தலாம்.
காதல் எப்படித் தோற்கும்? மனிதன் தான் காதலிடம் தற்காலிகமாகத் தோற்றுக்கொண்டே இருக்கிறான்.

“ராம் வேறொரு திருமணம் செய்துக்கொண்டிருக்கலாமே?” என்று கேள்வி எழலாம். 
ஒருவேளை தான் இப்படித் தனியாக இருப்பது ஜானுவை வருத்தப்படவைக்கிறது என்று தெரிந்திருந்தால், ராம் திருமணம் செய்திருப்பான். அப்படி முடிவெடுக்கும் தருணத்தில் கூட ஜானுவைத் தவிர வேற பெண்ணுடன் வாழ்வது கடினம் என்பதை உணர்ந்திருப்பான். திருமணம்செய்தே ஆக வேண்டும் என்ற காரணத்திற்காக ஏதோ ஒரு பெண்ணின் வாழ்க்கையை மோசமடையச் செய்வதற்கு இப்படியே இருந்துவிடலாம் என்று கடைசியில் எண்ணியிருப்பான்.

“இருவரும் தான் பிரிந்தார்கள். ஆனால் ராம் மட்டும் தான் இப்போது கஷ்டப்படுகிறான். ஜானு வேறு திருமணம் செய்து கொண்டு இப்போது நல்லா தானே வாழ்கிறாள்?” என சூப்-பாய்ஸ் பலர் கேட்பார்கள்.
முதலில், ராம் கஷ்டப்படுகிறான் என்பதை நீங்களாகவே எப்படி முடிவு செய்துவிட முடியும்?
இரண்டாவது, ஒரு பெண் திருமணம் செய்யாமல் வாழ இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் பாதுகாப்பான சூழ்நிலை இருக்கிறதா? அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ அவளுக்கெனச் சுதந்திரம் இருக்கிறதா? போன்ற கேள்விக்கான பதில்களை முதலில் நாம் தேட வேண்டும்.

படம் பார்த்த பின்னர், முன்னாள் காதலன்/காதலியை திட்டுவது, ‘Karma’ அவர்களைப் பார்த்துக்கொள்ளும் என்று சாபம் விடுவதெல்லாம் நடக்கலாம்.
நான் முன்பு சொன்னதைப் போல, காதல் ஏற்படுவதற்கும் காதலர்கள் பிரிவதற்கும் ஒரு காரணம் போதும். அதுவும் ஜாதி, மதம், பொருளாதாரம் போன்ற பல காரணிகள் இந்திய சமூகத்தில் இருக்கின்றன. சமீபத்தில் நடந்த அம்ருதா-பினராயி சம்பவம் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும்.

‘நான் நல்லவன்/நல்லவள். ‘Karma’ அவர்களைத் தண்டிக்கும்’ என்று நம்புவது மறைமுகமாகப் பழிவாங்கும் எண்ணத்தையே பிரதிபலிக்கின்றது. நீங்கள் உண்மையாகவே நல்லவராக இருந்தால், அவர்களை ignore செய்துவிடுங்கள். கஷ்டம் தான். ட்ரை பண்ணுங்க.

இருவரும் கடைசியில் சேர்ந்துவிடுவார்கள்’ என்று பலர் ஆசைப்படுவார்கள்.’
இல்லை. இருவரும் சேர மாட்டார்கள். VTV யில் ஆரம்பித்து La La Land வரை காதலர்கள் சேராமலிருந்தால் தான் அது காதல் காவியமாகக் கொண்டாடும் பழக்கம் நம் மக்களுக்கிருக்கிறது. இருப்பினும், ஆசைப்படுவது தவறில்லை. இருவரும் சேர்வார்கள் என்றே நீங்கள் ஆசைப்படுங்கள். அதைக் கெடுக்க எனக்கு விருப்பமில்லை.

டீஸர் பார்த்த உடனே இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடைந்துவிடும் என்று தோன்றியது. உள்ளுணர்வும் சொன்னது. அப்படி ஏதோ காரணத்தால் படம் தோற்றாலும் கூட எனக்கு டீஸர் மற்றும் டிரைலரே போதும்.
“இதெல்லாம் இருக்கட்டும். நீ சொல்வது அனைத்தும் முழுக்க முழுக்க உனது கற்பனை! கிறுக்குத்தனம் என்றும் சொல்லலாம்! இவையெல்லாம் நடக்க எந்த உத்தரவாதமுமில்லை!! எதுவும் நடக்காமல் போகக்கூட முழு வாய்ப்பிருக்கிறதே!?!” என நீங்கள் என்னைக் கேள்வி கேட்பது புரிகிறது.

But, காதலும் இப்படித் தானே?
                                                                     - ராம்.

படம் பார்த்த பின்பு எழுந்த என் எண்ணங்களைப் படிக்க - https://bit.ly/2XVS20x

  9 comments:

  1. அருமையான பதிவு KPK. நல்ல கற்பனை என்று கூறுவதைந்தவிட, நல்ல ஒப்பீடு என்று கூறலாம். இன்னும் நான் இந்தப்படத்தை பார்க்கவில்லை, ஒருவேளை படம் உங்கள் பதிவு போல் இல்லாமல் கூட இருந்து போகட்டுமே, ஆனால் எனக்கு ஒரு புது படம் பார்த்த உணர்வை கொடுத்ததே உங்கள் பதிவின் வெற்றி. இடைஇடையே ஆணாதிக்கத்தை உடைப்பதும், பெண் சமத்துவத்தை உயர்த்துவதும் பராட்டுதலுக்கு உரியது.இரண்டு மணி நேர தூக்கமின்மையை, இந்த 20நிமிட பதிவு தூக்கி எரிந்ததுவே என் நண்பருக்கு கிடைத்த வெற்றி.மகிழ்ச்சி.எழுச்சிகள் பல வேண்டும்.

    ReplyDelete
  2. வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அழகு❤️ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அழகான வரிகள்..நல்ல வாசிப்பு அனுபவம்.. நன்றி KPK

    ReplyDelete

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives