Thursday 11 May 2017

மனமும் மணமும் | The Choices



சமீபத்தில் ஆசிரியை ஒருவரின் முக்கோணக்காதல் தமிழகத்தில் பரவலாகப் பேசப்பட்டது. காதலின் பெயரில் அந்த ஆசிரியை மீது கார் ஏற்றி கொலை செய்த 'காதலன்', தானே காவல் நிலையத்தில் ஆஜரானார். ஆசிரியைக்கு விவாகரத்தாகி ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். இரண்டு பேரும் நல்ல வேலையில் இருக்கின்றனர். இறந்த ஆசிரியையின் உடலை போலீஸ்காரர்கள் அவரது பிள்ளைகளிடம் ஒப்படைக்கச் செல்ல, பிள்ளைகள் தங்களது தாயின் உடலை வாங்க மறுக்கிறார்கள். தங்கள் தாய் செய்தது 'இழிவான' செயல் என்று குறை கூறி உடலை வாங்க மறுத்திருக்கிறார்கள். கடைசியில் போலீஸ்காரர்கள் தாங்களே ஆசிரியையின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
இது தான் முழுச் சம்பவத்தின் சுருக்கம்.
இந்தச் சம்பவத்தைச் சுற்றி பல்வேறு கருத்துகள் எழுந்துக்கொண்டே தான் இருக்கிறது. "விவாகரத்தான ஒரு இந்தியப் பெண் தனது தேவைகளுக்காக ஒரு துணையைத் தேடுவது தவறேயில்லை. அது மட்டுமில்லாமல், அந்த ஆசிரியை தனது பிள்ளைகளுக்காகத் தனி ஆளாக உழைத்து இருவரையும் படிக்க வைத்து நல்ல நிலையில் வாழ்க்கையில் அமர வைத்திருக்கிறார். ஆனால், பிள்ளைகள் இருவரும் இறந்த தங்கள் தாயின் உடலை கூட வாங்க மறுத்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய தவறு. நம் சமூகம் ஆணாதிக்கச்  சமூகம் என்பதற்கு இந்தச் சம்பவத்தின் மீது வைக்கப்படும் விமர்சனமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பெண்ணுக்கு முழுச் சுதந்திரமும் முடிவெடுக்கும் உரிமையும் இன்னும் இங்கு வழங்கப்படுவதில்லை", என்ற கருத்தை பெண்ணியவாதிகள் முன்வைக்கின்றனர்.
பெண்ணியவாதிகளின் இன்னொரு பகுதியினர், "விவாகரத்திற்குப் பிறகு இன்னொரு துணையைத் தேர்வு செய்யும் முழு உரிமை ஒரு பெண்ணுக்கு உள்ளது. ஆனால் அது சட்ட ரீதியாக இருக்க வேண்டும்", என்ற இணை கருத்தை முன்வைக்கிறார்கள்.
வழக்கம் போல் சமூகத்தின் பெரும்பாலானோர் இந்தச் சம்பவத்தைக் 'கள்ளக்காதல்', 'அந்தரங்கம்', 'கில்மா' போன்ற வார்த்தை ஜாலங்களைக்கொண்டு பெயரிட்டும் பேசியும் வருகின்றன.
ஒரு பிள்ளைக்குத் தாய்/தந்தை என்பது "Nature Given Relationship." அந்தப் பிள்ளையால் அந்த உறவை மாற்றவும் முடியாது. தீர்மானிக்கவும் முடியாது. அதே போலத் தான் ஒரு தாய்/தந்தைக்கும், பிள்ளை என்பது "Nature Given Relationship." ஆனால் வாழ்க்கை துணை என்பது "Choice Based Relationship." ஒரு ஆணோ/பெண்ணோ தனது வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.("ஏன் டா நீ வேற...எங்க வீட்ல pure arranged marriage தான் allowed. அதுவும் எங்க ஜாதிக்குள்ள தான்.", என்று நீங்கள் கதறுவது நன்றாகத் தெரிகிறது!)
                Nature Given Relationship (NGR) மற்றும் Choice Based Relationship (CBR) ஆகிய இரண்டிற்கும் சூட்சமமான வித்தியாசங்கள் இருக்கின்றன.
  CBR உறவான வாழ்க்கை துணையோடு நீண்ட பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், மனிதன் தனது துணையை
விவாகரத்துச் செய்து கொள்ளலாம். இருவரும் சண்டையிட்டுத் தங்கள் வாழ்க்கையைக் கசப்பாக்கிக் கொள்வதை விட விவாகரத்து பெற்றுத் தனித்தனியாக வாழ்வது இருவருக்கும் நல்லது. இருவருமே தங்களுக்கேற்ற இன்னொரு துணையைத் தேர்ந்தெடுத்து மறுபடியும் திருமணம் செய்து பழைய வாழ்கையை விட ஒரு மேம்பட்ட வாழ்கையை வாழலாம். ஆக, CBR உறவு முறையில் மனிதன் தனது விருப்பத்திற்கு ஏற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கவும் உறவை முறித்துக்கொள்ளவும் செய்யலாம். இதைத் தவிர, உறவில் இருக்கும் போதே வேறொரு நபர் மீது காதல் ஏற்பட்டால், பழைய உறவை முறித்துப் புதிய உறவையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
NGRயில் கதை வேறு. NGRயில் மிக நெருங்கிய உறவு என்று பார்த்தால் அவை தாய், தந்தை மற்றும் கூடப் பிறந்தவர்கள்.
ஓர் உதாரணம் : ஒரு மகனுக்கும் தந்தைக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. எப்போதும் அவர்கள் இருவரும் பரிமாறிக்கொள்வது வெறுப்பையும் கோபத்தையும் தான். இருவருக்கும் இருவர் வேண்டாம் என்ற நிலையில் கூட இருவரும் தங்களிடையே இருக்கும் உறவை மாற்றிக் கொள்ள முடியாது. எவ்வளவு பிரச்சனைகளும் வெறுப்பும் இருந்தாலும், NGRயில் உறவை மாற்ற பெரும்பாலானோர் விரும்புவதில்லை.(மாற்ற வழியுமில்லை).
அதேபோல, உறவில் இருக்கும் போதே வேறொரு நபர் மீது அன்பு கொண்டு, பழைய உறவை முறித்துப் புதிய உறவை ஏற்படுத்திக்கொள்வது CBR உறவின் ஒரு முக்கியமான தன்மை. மிகப் பெரிய சலுகையும் கூட. இது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் இதை  NGRயில் யோசித்துப்பார்த்தல், அது மிகவும் விசித்தரமாகத் தோன்றும்.
கணவன் அல்லது மனைவி போலத் தாய் தந்தையையும் தங்களுக்குப் பிடித்தது போலத் தேர்வு செய்து அதைச் சட்ட ரீதியாக மாற்றிக்கொள்ளும் காலமும் வரலாம்.
ஆனால் CBR மற்றும் NGR உறவு முறைகளில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன.
     1. அனாதையாக இருக்கும் ஒரு குழந்தையைத் தங்கள் பிள்ளையாக ஒரு தம்பதி தேர்ந்தெடுப்பது CBR உறவு தான். ஆனாலும் அது NGR உறவு முறையாகப் பாவித்து மாற்றப்படுகிறது.
     2. Step Dad/Step Mom மற்றும் பிள்ளைக்கான உறவு முறையும் CBRயில் இருந்து NGRஆக மாற்றப்படுகிறது.
இவை இரண்டும் ஒரு ஆரோக்கியமான உறவு மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.

               ஆனால், என்னதான் இறந்த ஆசிரியையும் அவர்களது பிள்ளைகளும் NGR உறவு முறையில் வந்தாலும், அந்த இரு பிள்ளைகள் பல்வேறு காரணங்களால் அதை CBR உறவு முறை தொனியில் கையாண்டுண்டுள்ளனர்.(இது சரியா? தவாறா? என்பது ஒரு தனி விவாதம்.) - இங்கு ஒரு NGR உறவு முறை கிட்டத்தட்ட CBR போல மாற்றப்பட்டுள்ளது.
CBR உறவு முறையில் நபரை மாற்றிக்கொள்வதற்கான வழி இருக்கிறது. அதனால் மனிதன் இயற்கையாகவே தனது துணையை அவசியம் ஏற்பட்டால் மாற்றிக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டிற்குத் தள்ளப்படுகிறான். ஆனால், NGR உறவு முறையில் நபரை மாற்ற வழி இல்லாததால், எவ்வளவு சிரமம் வந்தாலும் அதைத் தீர்க்க முயற்சி செய்து அல்லது சகித்துக்கொண்டு வாழ்கிறான். இந்த இரண்டு நிலைகளிலும் பயனும் இருக்கிறது. பிரச்னையும் இருக்கிறது.
CBR உறவு முறையோ அல்லது NGR உறவு முறையோ...என்ன உறவாக இருந்தாலும் ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்து, தன்னலத்தோடு பிற உறவின் நலத்தையும் மதித்து அவர்களுக்கான சுதந்திரத்தை மதித்து, மரியாதை செலுத்தி, தேவைகளைப் பூர்த்திச் செய்து, அகங்காரம் கொள்ளாமல், தவறுகளை ஒத்துக்கொண்டு அதைத் திருத்தி, அன்பையும் காதலையும் மூலப்பொருளாகக் கொண்டு வாழ்ந்தால், எவ்வுறவும் இனிமையே.

"இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஒவ்வொருத்தரின் பிரச்சனை அவரவரது பார்வையிலிருந்து பார்த்தல் தான் தெரியும். யார் வேண்டுமானாலும் எளிதாக அறிவுரை கூறிவிடலாம்! ", எனச் சொல்பவர்களுக்கு விடை ஒன்று தான்.

"வாழ்க்கையும் ஒரு சிக்கல் தான்."
"வாழ்க்கையே சிக்கல் தான்."

இதில் உங்களுக்கேற்ற வாக்கியத்தை யோசித்து முடிவெடுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையாக அமையலாம். மாறலாம்.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives