Sunday 8 January 2017

மெல்ல எழுந்தேன் | The First



Place : My Room, Chennai.
Time : Early Morning around 3.30 A.M.

         உடம்பு முழுக்கப் பயங்கர வலி. உடை முழுவதும் மணலும் புழுதியுமாக இருந்தது. தலையிலும் பயங்கர வலி. மெல்ல எழுந்தேன். எழுந்து கொண்டிருக்கும் போது "ஜலக்" என்ற சிறு சத்தம். சுற்றிப் பார்த்தேன். வீட்டின் எதிரிலிருந்த தெருவிளக்கின் ஒளி லேசாக ரூமை நிரப்பியிருந்தது. நண்பன் தூங்கிக்கொண்டிருந்தான். என் அருகிலிருந்த ஜன்னல் திறந்திருந்தது. வேகமாகக் காற்றும் வீசிக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டில் கட்டிட வேலையைக் கடந்த ஒரு மாதமாகச் செய்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து தான் பயங்கரப் புழுதியும் மணலும் காற்றைக் கொண்டு என்மேல் படிந்து வருடிக்கொண்டிருக்கலாம் என நினைக்கிறன். ஜன்னலுக்குப் பக்கத்திலிருந்த டேபிள் மீது வைக்கப்படிருந்த என்னுடைய வாட்சை எடுத்து நன்கு ஊதி தூசி தட்டிவிட்டுச் சட்டைப் பாக்கெட்டில் வைத்தவாறு உடம்பிலிருந்தும் உடையிலிருந்தும் புழுதியை தட்ட வீட்டுக் கதவைத் திறந்து verandaவில் நின்றேன். மார்கழி மாதம். இரண்டாவது மாடி. நல்ல குளிர். சட்டையைத் தட்டிய பிறகு பேண்டை தட்ட ஆரம்பித்தேன். இவ்வளவு மணலும் புழுதியும் காற்று மூலம் தான் என்மேல் படிந்திருக்குமோ? என்பதை யோசித்துக்கொண்டிருக்க,

“ஜலக் ஜலக் ஜலக்..." மீண்டும் அதே சத்தம்.

யாரோ கொலுசு மாட்டிக்கொண்டு ஓடினால் வரும் சத்தம் போல இருந்தது. இந்நேரத்தில் யார் ஓடுவார் என்று நினைத்துக்கொண்டு சுத்தம் செய்த சட்டையும் பேண்டையும் சரி செய்தவாறு தற்செயலாகக் கீழே பார்த்தேன். முதல் தளத்தில் வசிக்கும் ஸ்ரீகலா பாப்பா காற்றில் பறக்கும் தனது மஞ்சள் பலூன் பாலை பிடிக்க ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தாள். சட்டைப் பாக்கெட்டில் இருந்த வாட்ச் 3.40 A.M என்ற நேரத்தை காட்டிக்கொண்டிருந்தது. இந்நேரத்தில் ஒரு 7 வயது பெண் குழந்தை நடு ரோட்டில் ஓடிக்கொண்டிருப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எனக்கு இதை விட மிகப் பெரிய ஷாக் ஒன்று இருந்தது. நேற்று மாலை தான் முதல் தளத்தில் வசிக்கும் லக்ஷ்மி அக்கா, அவரது கணவர் சுந்தர், ஸ்ரீகலா பாப்பா, பாப்பாவின் தாத்தா ஆகிய நால்வரும் பொங்கலுக்காக அவர்களது சொந்த ஊருக்குக் கிளம்பினார்கள். சென்னை திரும்ப 15 நாட்கள் ஆகும் என்று தெரிவித்துத் தான் விடைபெற்றனர். இதை அடிப்படையாகக் கொண்டு நான் கீழே ரோட்டில் பார்த்துக்கொண்டிருப்பது கனவாக இருக்குமோ? அல்லது தூக்க கலக்கத்தினால் உருவாகும் மனப் பிரம்மையாக இருக்குமோ? என்று எனக்கு நானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்க, ஓடி விளையாடிக்கொண்டிருக்கும் ஸ்ரீகலாவை நோக்கி Monkey குல்லா அணிந்த ஒரு பெரும் உருவம் கொண்ட ஆண்மகன் நடந்து வந்தான். தனது வெள்ளை kerchief’வை பாப்பாவின் மூக்கு மற்றும் வாய் மீது வைத்து அழுத்தினான். குழந்தை மயங்கி விழ அதைத் தன் தோளில் தூக்கி வைத்து அங்கிருந்து நடந்தான். தெரு விளக்கின் ஒளியிலிருந்து அவன் கடந்து சென்றதால் என்னால் அவனை இப்போது பார்க்க முடியவில்லை.

அவசரமாக verandaவிலிருந்து ரூமுக்குள் விரைந்து நண்பனை எழுப்பினேன். காய்ச்சலுக்காக நேற்று இரவு அவன் சாப்பிட்ட Crocin 650mg, அவன் எழுவதைத் தடுத்துக்கொண்டிருந்தது. சிரமப்பட்டு எழுந்து அரைத் தூக்கத்தில் அவன் இருக்க நான் அவனிடம் நடந்ததைக் கூறினேன். அதற்கு அவன்,
"டேய். நடு ராதிரியுல விளையாடாத. Fever'ல நானே முடியாம இருக்கேன். 
போய்க் கம்முனு படுத்துத் தூங்கு. கடுப்பாய்டுவேன்" என்று சொல்லிவிட்டு மீண்டும் தனது தூக்கத்தைத் தொடர தனது சிவப்பு போர்வையைச் சரி செய்தான். நான் பார்த்ததை நடந்ததை மறுபடியும் அழுத்தமாகக் கூறினேன். 
அதற்கு அவன், "அவங்களுக்கு டாக்ஸி புக் பண்ணி கொடுத்ததே நாம தான். இதுல கலா பாப்பாவ பார்தானாம். அதுவும் தனியா நடு ரோட்ல இந்நேரத்துல ஓடி விளையாடிகிட்டு. பத்தாததுக்கு இதுல kidnap சீன் வேற. 
ஷெர்லாக் புது எபிசோட் மாதிரி மொக்கையா இருக்குடா உன்னோட கதை. புதுசா எதாச்சும் ட்ரை பண்ணு.”, என்று சொல்லிவிட்டுத் தூங்கினான். 
லாஜிக்கா பார்த்தா அவன் இடத்துல நான் இருந்தால் கூட எதையும் நம்பமாட்டேன். அவன் சொன்ன மாதிரி Olaவை விட Uber கொஞ்சம் சீப்பாக இருக்கும் என அவர்களுக்கு டாக்ஸி புக் பண்ணி கொடுத்ததே நான் தான்.

ஆனால் நான் கண்ணால் பார்த்தது? 
குழந்தை அணிந்திருந்த டோரா பொம்மை போட்ட மினி-skirt தீபாவளிக்கு சரவணா ஸ்டோர்ஸ்ல வாங்கினது என்று லக்ஷ்மி அக்கா சொன்னது நினைவில் நல்லா இருக்கு. இதைத் தவிர அவள் விளையாடிக் கொண்டிருந்த மஞ்சள் நிறத்து பலூன் பால் நானும் எனது நண்பனும் அவளது சமீபத்திய பிறந்தநாளுக்காக வாங்கிப் பரிசளித்தது. ஸ்ரீகலாவுக்குப் பிடித்த நிறம் மஞ்சள். அதனால் தான் மஞ்சள் நிறத்தை நான் தேர்வு செய்தேன்.

கடத்திச் செல்லப்பட்ட குழந்தை ஸ்ரீகலா தான் என்பதை முடிவு செய்ய இந்த இரு காரணங்கள் தாராளமாகப் போதும். ஆனால் நேற்று மாலையே குடும்பத்தோடு ஊருக்கு சென்ற குழந்தை இங்கு இந்நேரத்தில் நடு ரோட்டில் எப்படி? நான் பார்த்தது ஸ்ரீகலா தானா? குழந்தையை ஒருவன் ஏன் கடத்திச் செல்லவேண்டும்? இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஸ்ரீகலாவின் பெற்றோர்களைத் தொடர்பு கொள்வது தான் என்று முடிவு செய்து முதல் தளத்திற்கு மொபைலை எடுத்துக்கொண்டு இறங்கினேன். எதிர்பார்த்தது போலவே அவர்களது வீடு பூட்டியிருந்தது. சுந்தர் அண்ணனுக்குக் கால் செய்தேன். “This Phone Number is Switched Off” என்று ஒலித்தது. விசித்தரமாக இருந்தது. லக்ஷ்மி அக்காவிற்குக் கால் செய்தேன். “This Phone Number is Not Reachable” என்று ஒலித்தது. சந்தேகம் வந்தது. போன் நம்பர் சரிதானா என்று செக் செய்துவிட்டு இதை நண்பனிடம் சொல்லியே ஆக வேண்டும் என்று மேலே ஏறினேன். கதவை திறக்கலாம் என்று திரும்பினால் கதவு முழுவதும் திறந்திருந்தது. அவசரத்தில் கதவை மூடாமல் வந்திருந்தேன். நடந்ததை நண்பனிடம் கூற ரூம் லைட் ஆன் செய்தேன். கட்டிலில் நண்பன் இல்லை. பாத்ரூமில் இருப்பான் போல என நினைத்து நம்பரை சரிப்பார்க்க அவனுடைய போனை தேடினேன். போனைக் காணோம். இருட்டில் பாத்ரூம் ஸ்விட்சை ஆன் செய்யப் போனை எடுத்துச்சென்றிருக்க வேண்டும். நாற்காலியில் உட்கார்ந்து மீண்டும் மீண்டும் லக்ஷ்மி அக்காவிற்கும் சுந்தர் அண்ணனுக்கும் டயல் செய்துக்கொண்டிருந்தேன். 
சட்டென்று ஒன்று யோசித்தேன். நண்பனின் சிவப்பு போர்வை எங்கே? 
போர்வையை யார் பாத்ரூமுக்கு எடுத்து செல்வார்கள்?!? என்று எண்ணி பாத்ரூம்மை நோக்கி ஓடினேன். பாத்ரூம் கதவு திறந்திருந்தது. லைட்டை ஸ்விட்ச் ஆன் செய்து பார்கையில் உள்ளே யாரும் இல்லை. நிலைமை சற்றுப் பதற்றமாக அவனுக்குக் கால் செய்தேன். 

“This Phone Number does not exist.” 

ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திகைத்தேன். வீட்டை பூட்டி விட்டு மொட்டை மாடியிலும் வீட்டை சுற்றியும் தேடினேன். அவனை எங்கும் காணோம்.

சூழ்நிலை மோசமாகப் பக்கத்து வீட்டு அட்வகேட் அங்கிளிடம் நடந்ததை சொல்லலாம் என்று கேட் சாவியை எடுத்துக்கொண்டு கீழே சென்றேன். கீழே இறங்கையில் சட்டைப் பாக்கெட்டில் 4.05 A.M மணி காட்டிய வாட்சை இடது கையில் கட்டிமுடிக்க, நேற்று இரவு நான் பூட்டிய கேட் திறந்திருந்தது.

இந்த மெயின் கேட்டிற்கு 3 சாவிகள் தான். ஒன்றை கையில் நான் வைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னொன்று சுந்தர் அண்ணாவிடம் இருக்கும். மூன்றாவது சாவி தரைதளத்தில் காலியாக இருக்கும் வீட்டில் குடியேறுபவர்களுக்குரியது. இப்போது ஹவுஸ்-ஓனரிடம் இருக்க வேண்டும். பின்பு எப்படி 'Globe’ பூட்டால் பூட்டப்பட்ட கேட் திறந்திருக்கிறது? என்று விடை தெரியாப் பல கேள்விகளோடு இந்தக் கேள்வியும் சேர்ந்துக்கொள்ள, அட்வகேட் அங்கிள் வீட்டுக்கு விரைந்தேன். காலிங் பெல்லை அழுத்தும் போது மற்றொரு பீதி காத்துக்கொண்டிருந்தது.

ரூம்-மேட்டின் சிவப்பு நிறப் போர்வை கிழிக்கப்பட்டுத் தெரு முனையில் இருந்தது. போர்வையை நோக்கி நடந்தேன். இது அவன் போர்வையாக இருக்கக்கூடாது என்று மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அருகில் சென்று அதை எடுத்துப்பார்த்தேன். இது அவனுடைய போர்வை தான். ஸ்ரீகலா பாப்பா கடத்தப்பட்ட அதே இடத்தில் தான் இந்தப் போர்வை இருந்தது. அந்த இடத்தில் தான் நான் இப்போது ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருக்க, அதே Monkey குல்லா அணிந்த உருவம் ஸ்ரீ கலாவை தன் தோளில் வைத்து தூரத்திலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். சடீரென்று வலப்பக்கம் திரும்பி மாயமானான். வலப்பக்கம் உள்ள தெரு மெயின் ரோட்டில் சேரும். அவன் நின்றிருந்த இடத்தை நோக்கி மெதுவாக நடந்தேன். அந்த இடத்தை அடைந்த பின்பு அவன் மாயமான திசையை நோக்கி பார்த்தேன். அத்தெரு முனைவரை யாரும் இல்லை. ஆனால் சிவப்பு நீல லைட்கள் மாறி மாறி மெயின் ரோட்டுக்கு அந்த முனையில் எரிந்துக் கொண்டிருந்தன. ஆம்புலன்ஸ் வண்டியாக இருக்க வாய்ப்புக் குறைவு. போலீஸ் வாகனாமாகத் தான் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எண்ணியபடியே மெயின் ரோட்டை நோக்கி நடந்தேன். தூரத்தில் இருக்கும் ஹாசீப் பாய் தனது டீக்கடையைத் திறந்துவிட்டார் என நினைக்கிறேன். சரியாக 4.00 A.M மணிக்கு தனது கடையைத் திறந்துவிடும் ஹாசீப் பாய், தீவிரமான இளையராஜா விசிறி. “அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்...” என்ற இளையராஜா பாடல் பல்லவிகளைத் தாண்டி சரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

நின்றுக்கொண்டிருந்தது போலீஸ் வண்டி தான். உள்ளே இரு போலீஸ்கார்கள் இருப்பதைப் பார்த்தபின்பு ஒரு விவரிக்கமுடியாத உணர்வு. பாசிடிவ் உணர்வு. 
பாடலின் சரணம் வந்தது. சரணம் முடிவதற்கு முன் நான் நடந்ததையெல்லாம் போலீஸ்காரர்களிடம் சொல்லிவிடலாமா அல்லது அட்வகேட் அங்கிளிடம் சொல்லிவிடலாமா? யாரிடம் முதலில் சொல்லிவிடுவது என்ற முடிவை எடுக்க வேண்டும். 
சரணம் முடிந்தது. அடுத்தப் பாடல் தொடங்க ஆரம்பித்தது. எனது முடிவை எடுத்துவிட்டேன். என்னுடைய முடிவு என்னவாக இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

மெட்ரோ இரயில் வேலை நடந்துக்கொண்டிருந்ததால் குண்டும் குழியுமாக மண்ணையும் கற்களையும் கொண்ட மெயின் ரோடு மூடப்பட்டிருந்தது. அதைக் கொண்டு கிராஸ் செய்ய முடியாது. பக்கதிலிருக்கும் மேம்பால நடைப்பாதையைத் தான் பயன்படுத்த வேண்டும். மேம்பால நடைப்பாதையின் படிக்கட்டுகளின் மேல் ஏற ஆரம்பித்தேன். முழுவதுமாகக் கட்டிமுடிக்கப்படாத இந்த மேம்பாலத்தில் இருபுறமும் கிரில்-கம்பிகள் இல்லை. அதனால் கவனத்தோடு மெதுவாகப் படிகளை ஏறி நடைப்பாதையை அடைந்தேன். போலீஸ்காரர்கள் வண்டியை ஸ்டார்ட் செய்தனர். வண்டி மெதுவாக நகர ஆரம்பித்தது. கிளம்பிவிடுவார்கள் என்று எண்ணி ஓட ஆரம்பித்தேன். அந்தக் காட்சியைப் பார்த்த பின்பு ஓடாமல் அப்படியே உறைந்து நின்றேன். போலீஸ் வண்டி புறப்பட்டுவிட்டது.

கருப்பு புடவை கட்டிய, தன் புடவையால் முகம் மறைத்த ஒரு பெண் ஸ்ரீகலாவை தனது ஒரு கையால் பாலத்திற்குக் கீழே போடும் வகையில் பிடித்திருக்க, எனது பின்புறத்திலிருந்து ஒரு மெல்லிய குரல், "பிரதர். அப்படியே அசையாமல் நில்லுங்க. அசஜ்ஜீங்க...பாப்பாவ கீழே போட்டிடுவோம்.” என்றது.

கையில் கட்டியிருந்த வாட்சின் நொடி முள் ஓசை நன்றாகக் கேட்க ஆரம்பித்தது. அவனுடைய நிழல் என் காலின் பக்கத்தில் தெரிந்தது. Monkey குல்லா போட்டிருந்தான் என்பதை அவன் நிழல் காட்டிக்கொடுத்தது. இவன் தான் ஸ்ரீகலாவை கடத்தியிருக்க வேண்டும். அவன் கையில் ஆயுதம் வைத்திருப்பானா? வைத்திருந்தால் என்ன ஆயுதமாக இருக்கும்? போன்ற சினிமாத்தனமான கேள்விகள் தோன்ற,
சமீபத்தில் பார்த்த AYM படத்தின் டயலாக் ஒன்று தான் இப்போது ஓடிக்கொண்டிருந்தது எனது மனதில். 
“வாழ்க்கைல என்ன வேணா நடக்கலாம். 
அதுக்கு நாம ரெடியா இருக்கோமாங்கறது தான் கேள்வி!”
ஆனா இப்போ நான் ரெடியா இல்லை. நான் திரும்பினால் கூட அந்த 7 வயது பெண் குழந்தை உயிரை இழந்துவிடுவாள். அதுமட்டும் இல்லை. 
தனியாக ஒருவனிடம் சண்டை போட்டு வெற்றி பெற்றுக் கடைசியில் குழந்தையைக் காப்பாற்ற நான் ஒன்றும் ஹீரோ இல்லை. இது சினிமாவும் இல்லை. 
இவை மனதில் ஓடிக்கொண்டிருக்கச் சம்மந்தமே இல்லாமல் கடந்த வாரம் லக்ஷ்மி அக்கா சொன்னது மீண்டும் காதுகளில் ஒலித்தது. 
“ஸ்ரீகலாவோட கொலுசு தொலஞ்சுபோச்சு டா. அண்ணன் என்னை பயங்கரமா திட்டப்போறாரு.” மீண்டும் மீண்டும் இந்த வாக்கியம் காதுகளில் ஒலிக்கத் திடீரென்று ஒரு கேள்வி தோன்றியது. 
அப்படியானால் "ஜல் ஜல்...” என்ற சத்தம் கொலுசு சத்தம் இல்லை. ஸ்ரீகலாவின் கொலுசு தான் தொலைந்து போய் ஒரு வாரத்திற்கும் மேலாகிறதே. 
பின்ன என்ன சத்தமாக இருக்கும்?!? 
கட்டிலிளிருந்து நான் எழும் போதும் புழுதி மற்றும் மணலை பேண்டிலிருந்து தட்டும் போது தான் "ஜல் ஜல்...” என்ற சத்தம் வந்தது. 
எனது வலது பேண்ட் பாக்கெட்டில் ஏதோ இருப்பதைப் பார்த்தேன். மொபைல் போன் கிடையாது. 
ஏனென்றால், எதற்குமே நமக்குப் பயன்படாது என்று முன்தினம் வாங்கிய ஜியோ சிம் கொண்ட என்னுடைய மொபைல், சட்டை பாக்கெட்டில் இருக்கிறது. இனி என்ன வேண்டுமானால் நடக்கலாம் என்று வீட்டை விட்டு கீழே இறங்கும் போதே நண்பனின் பிரபலமான facebook பேஜ்ஜில் லைவ் வீடியோ ஆப்ஷனை ஆன் செய்து கேமரா தெரியும் வகையில் சட்டைப் பாக்கெட்டில் வைத்துவிட்டேன். மீதம் இருப்பது வீட்டு சாவியும் கேட் சாவியும் தான். அவை பேண்டின் இடது பாக்கெட்டில் இருக்கிறது. அப்படியானால் வலது பாக்கெட்டில் இருப்பது என்ன?

ஞாபகம் வந்துவிட்டது. 
நகங்களை வெட்டிவிட்டு nail cutterரை மறந்து பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டேன். நக வெட்டியின் நுனியில் இருக்கும் செயினிலிருந்து தான் "ஜல் ஜல்...” என்ற சத்தம் வந்துக்கொண்டிருந்தது. இந்த நக வெட்டியை வைத்து என் பின்னாடி நிற்கும் ஆளை என்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவது கஷ்டம் தான். முன்பு சொன்னது போல, நான் ஹீரோ கிடையாது. சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி. 
ஆனால் அவனுடைய கட்டுபாட்டை இழக்க ஒன்று பண்ணலாம். அட்லீஸ்ட் முயற்சிக்கலாம் என்று தோன்றியது. பிளான் செய்தேன். தயாரானேன்.

சற்றென்று அவன் முகத்திற்கு நேரே திரும்பும் போது பாக்கெட்டிலிருக்கும் nail cutter’ரை எடுத்தேன். அவனை நோக்கி ஓடிப்போய், அவனுடைய கழுத்திற்கு அருகில் என்னுடைய கை நெருங்கும் போது நக வெட்டியின் நடுவில் கத்தி போல் இருப்பதை வெளியில் எடுத்து அவன் கழுத்தில் குத்தினேன். அவன் நிலைகுலைய ஆரம்பிக்கும்போது அவனை இழுத்து பிடித்து மேம்பால நடைபாதையிலிருந்து இருவரும் கீழ்நோக்கி விழுந்தோம். இவை அனைத்தும் இரண்டு அல்லது மூன்று நொடிகளில் நடந்திருக்கலாம்.

இருவரும் தரையைத் தொட சில மைக்ரோ நொடிகளே இருக்க, ஸ்ரீகலாவை பார்த்தேன். நான் எதிர்பார்த்தபடி அந்தப் பெண் ஸ்ரீகலாவை நடைபாதையில் எறிந்துவிட்டு தப்பிக்க ஓடினாள். ஸ்ரீகலா உயிர் தப்பிவிட்டாள். 
இப்போது தரையைப் பார்த்தேன் கட்டிட வேலைக்கான மணல் குவிக்கப்பட்டிருந்தது. அதன் மேல் தான் இப்போது இருவரும் விழப்போகிறோம். நான் உயிர் தப்பிப்பேனா என்பது தெரியாது.

இன்னொடியில் எனக்கு ஒரே ஒரு ஆசை தான். 
நான் கையில் கட்டிக்கொண்டிருக்கும் இந்த ப்ளாக்-டயல் சொனாட்டா செயின் கடிகாரத்திற்கு ஒன்றும் ஆகக்கூடாது. 
காரணம் - இந்த வாட்ச் எனக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுக்கப்பட்டது. 
இதோ...தரை நெருங்கிவிட்டது. கீழே விழுந்துவிட்டேன்.
[மீண்டும் மேலிருந்து (உடம்பு முழுக்கப்...) படிக்கவும்]

  2 comments:

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives