Thursday 16 January 2014

நான்ஸ்டிக் பாத்திரங்கள் நல்லதா? கெட்டதா? | Cover Page Article | Doctor Vikatan | டாக்டர் விகடன்


இன்றும் பல வீடுகளில் 'என் அம்மா சமைச்சா... அத்தனை ருசியா இருக்கும்... வாசனை ஊரையே தூக்கும்’ என்று, மனைவி செய்த சமையலை ஒரு கவளம் வாயில் வைத்ததும், வார்த்தைகளை உதிர்க்கும் கணவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களில் உணவைச் சமைத்ததும் உற்சாகமான மனநிலையில் அன்பையும் கரண்டி வழியே கலந்து பரிமாறியது இன்று, குறைந்திருப்பதுதான் இதற்குக் காரணம். உணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.  

மண் பாண்டத்தில் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனத் தொடர்ந்து, தற்போது... ஈசியாக செய்யக்கூடிய, உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் விற்பனைக்கு வந்து பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை, மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள், இன்று காட்சிப் பொருள்களாக மாறிவிட்டன. விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக்கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.

ஸ்வீடன் நாட்டின் உப்சலா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கைதான், உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அது 'நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்ததைச் சாப்பிடுபவர்களுக்கு, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்’ என்பதுதான். நான்ஸ்டிக் பாத்திரங்களில், 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’ (Perfluorinated compounds) எனப்படும் ஒரு வகை ரசாயனக் கலவை இருக்கிறது. சமைக்கும்போது உணவில் கலக்கும் இந்த ரசாயனம், உணவை ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. இது கணையத்தின் செயல்பாட்டைப் பாதித்து, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது என்கிறது, இந்த ஆராய்ச்சி முடிவு.

இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த 'மோனிக்கா லின்ட்’ இது குறித்துக் கூறுகையில், 'நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலிகுளோரினேட்டட் பைபீனைல்ஸ், டயாக்சின்ஸ், பிஸ்பினால் ஏ போன்றவை, சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இதேபோல, சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’கள் நம் உடலில் உள்ளதா என்பதை ஆராய்ந்தோம். ஏனெனில், நான்ஸ்டிக் பாத்திரம் உள்ளிட்ட பல வீட்டு உபயோகப் பொருட்களில் இந்த ரசாயனம் உள்ளது. இது உணவில் கலந்து நம்முடைய உடலில் சென்று சேர்கிறதா என்பதை கண்டறிவதன்மூலம் இந்த பொருட்களில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.

ஆய்வில் பெரும்பாலானவர்களுக்கு, பர்ஃப்ளூரினேட்டட் அமிலம் அதிக அளவில் இருந்ததைக் கண்டறிந்தோம். இது கணையத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, இன்சுலின் சுரப்பைப் பாதிக்கிறது. இந்த ரசாயனம் கணையத்தை எப்படி பாதிக்கிறது என்பது பற்றி நாங்கள் விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வைப் பற்றி சர்க்கரை நோய் நிபுணர், கருணாநிதியிடம் கேட்கையில், 'இதைப் படித்துவிட்டு சர்க்கரை நோய் வருவதற்கு, நான்ஸ்டிக் பாத்திரம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. சர்க்கரை நோய்க்கு மூலகாரணங்கள் மூன்று. அவை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், குறைவான உடற்பயிற்சி மற்றும் மரபணு. இதைத் தவிர இதர காரணங்கள் பல உண்டு. அதில் இந்த பர்ஃப்ளூரினேடட் ரசாயனக் கலவை முதன்மையான காரணமாக இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். நச்சுத் தன்மையுடைய இந்த ரசாயனக் கலவை, கணையத்தை நேரடியாகப் பாதித்து, கணையத்தில் சுரக்கும் இன்சுலின் குறிப்பிட்ட அளவுக்குக் குறைவாகவும் அல்லது அதிகமாகவும் வெளியேறுகிறது. இன்சுலின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ரத்தத்தில் சேர்வதனால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே மக்கள் இந்த நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நான்ஸ்டிக் பாத்திரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் சர்க்கரை நோயைத் தவிர்த்துவிடலாம் என்று கருதிவிடக்கூடாது. 'ஜங்க் ஃபுட்’ உண்ணும் பழக்கத்தைத் தவிர்த்துவிட்டு அதிக நார்ச் சத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், தினசரி உடற்பயிற்சி போன்றவற்றால், சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்' என்றார்.


'உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உணவில் சுவையும், சத்தும் அதிகரிக்கச் செய்யும் என்பது உண்மை.’ என்கிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த சித்த மருத்துவர் கண்மணி.


'மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை. பாத்திரம் என்ற வரிசையில்கூட அது வராதது வருத்தத்தை அளிக்கிறது.

மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. 
இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை. எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும். ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும். இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே' என்றார் டாக்டர் கண்மணி.

 - செ.கிஷோர் பிரசாத் கிரண், எஸ்.வெங்கடகிருஷ்ணன்
படம்: சிவபாலன், அ.ஜெஃப்ரி தேவ், ர.சதானந்த்

லலிதா, கோடம்பாக்கம்
என் வீட்டில் பெரும்பாலான பாத்திரங்கள் நான் ஸ்டிக்தான்.  நொடியில் சமைக்க முடிகிறது. எண்ணெய் அதிகம் செலவாகாததால், கொலஸ்ட்ரால் பயமும் இல்லை. அதிக எடையும் இல்லை. சமைத்த பாத்திரங்களையும் சுலபமாகத் தேய்த்துவிட முடியும். சிவப்பு, கருப்பு, நீலம், மஞ்சள் எனப் பல நிறங்களில் வருவதால், கிச்சனையும் கலர்ஃபுல்லாக மாற்றிவிடலாம்.


Link:

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives