Friday 1 November 2013

மெக்கானிக் கார்னர் | Mechanic Corner | Motor Vikatan | மோட்டார் விகடன்

ஹீரோ சரவணன்!

''எத்தனை புதிய பைக்குகள் வந்தாலும், ஹீரோ ஹோண்டா பைக்குகள்தான் எனக்கு ஆல் டைம் ஃபேவரிட். எனக்குக் கல்யாணம் ஆனாலும் என் முதல் மனைவி, என்னுடைய ஹீரோ ஹோண்டா பைக்தான்'' என அதிர்ச்சி கொடுக்கிறார் மோ.வி வாசகர் பவன்சிங். தன்னுடைய ஃபேவரிட் மெக்கானிக் பற்றி இதைவிட அதிகம் புகழ்கிறார். 
சென்னை பெரம்பூரில் வசிக்கும் பவன் சிங் நம்மிடம், ''பைக்கை உயிருக்குயிராக நேசிப்பவர்களுக்குப் பெரும் சவால், பராமரிப்புதான். பல மெக்கானிக் ஷாப்புகள் இருந்தாலும் நம் அலைவரிசைக்கு ஏற்ற மெக்கானிக்குகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி எனக்குக் கிடைத்தவர்தான் இவர்'' என சரவணனை அறிமுகம் செய்தார் பவன்.
''சரவணன், ஹீரோ ஹோண்டா பைக்குகளை மட்டும்தான் பார்ப்பார். வேறு எந்த பைக்கையும் சர்வீஸ் செய்வது இல்லை. பெரம்பூர் பகுதி ஹீரோ ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு, இவர்தான் குடும்ப மெக்கானிக். இவர் இருக்கும் நம்பிக்கையில் தான் நாங்கள் ஹீரோ ஹோண்டா பைக்குகளை வாங்கினோம். இன்று ஹீரோ பைக்குகளையும் வாங்குகிறோம்' என்கிறார் பவன்.

சென்னை பெரம்பூர் மூலக்கடையில், 'காமாட்சி ஹீரோ ஹோண்டா’ என்ற பெயரில் வொர்க்ஷாப் வைத்திருக்கும் சரவணனிடம் பேசினோம்.
''எனக்கு சிறு வயதிலிருந்தே பொருட்களைப் பிரித்து மாட்டுவது என்றால், ரொம்ப இஷ்டம். மின் விசிறி, வாட்ச், சைக்கிள் என எது கிடைத்தாலும் பிரித்துப் பார்த்துவிடுவேன். இந்தப் பழக்கம் நாளாக நாளாக பைக் மீது விழுந்தது. பைக் மெக்கானிக் ஆக வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
அந்தச் சமயம், 1997-ல் மூலக் கடையில் சங்கரன் என்பவர் 'விர்கோ ஆட்டோமொபைல்ஸ்’ என்ற வொர்க்ஷாப் திறந்தார். அதற்கு முன்பு ராணுவத்தில் மெக்கானிக்காக அவர் வேலை செய்தவர். அவர்தான் என் குரு. அவரிடம் இருந்துதான் நான் தொழிலைக் கற்றுக்கொண்டேன். ஆறு ஆண்டுகள் அவரிடம் வேலை செய்த பின்பு, அவர் சொந்த ஊருக்குச் செல்ல... நான் பைக் வொர்க்ஷாப் ஆரம்பித்தேன். 'நேர்மை, தரம், சரியான கூலி’ - இது எனது குருவின் கோட்பாடு. அதுதான் எனக்கும்.
தினமும் 6 முதல் 8 பைக்குகள் வரை மட்டுமே சர்வீஸ் செய்வேன். என் வாடிக்கையாளர்கள், முதல் நாள் இரவே என்னிடம் கேட்டுவிட்டு, காலை பத்து மணிக்குள் பைக்குகளை வொர்க்ஷாப்பில் நிறுத்திவிடுவார்கள். காலை எட்டு மணி முதல் மாலை பத்து மணி வரை வேலை செய்வேன்' என்கிறார்.
''சரவணனின் சிறப்பே அவரது நேர்மைதான். தொழில் பக்தி மிகுந்தவர். சொன்னதைச் சரியாக, குறித்த நேரத்தில் செய்து தருவார். நேரம் தவறாமை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பண்புக்காகவே ரெட் ஹில்ஸ், மணலி, மாத்தூர் எனப் பல இடங்களில் இருந்து இவரை வாடிக்கையாளர்கள் தேடி வருகிறார்கள். இன்ஜினில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஒரு மணி நேரத்தில் சரிசெய்து விடுவார். பெரும்பாலும் புது பைக் வாங்கியவர்கள் முதல் சர்வீஸை சரவணனிடம் செய்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்' என்கிறார் சரவணனின் வாடிக்கையாளரான குமார்.
தொடர்ந்து பேசிய சரவணன், 'ஹீரோ ஹோண்டா பைக்கைப் பராமரிப்பது சிரமம் இல்லை. தினசரி சின்னச் சின்னப் பராமரிப்பு விஷயங்களைக் கையாண்டாலே பைக்கில் எந்தப் பிரச்னையும் வராது. தரமான பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்புவது, சரியான வேகத்தில் சரியான கியரைத் தேர்ந்தெடுத்து, கிளட்சை முழுமையாகப் பிடித்து மாற்றுவது, 2,000 கி.மீ ஒருமுறை சர்வீஸ் செய்வது என கடைப்பிடித்து வந்தாலே, உங்கள் பைக் நீங்கள் சொன்னபடி கேட்கும். ஹீரோ ஹோண்டாவின் இன்ஜின், உலகத்துக்கு உதாரணமாக இருக்கும் பெஞ்ச் மார்க் இன்ஜின். இதன் வெற்றிக்குக் காரணமே சிம்பிள் மெக்கானிசம்தான்.
நான் இந்தத் தொழிலுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை நான்கு பேருக்கு தொழிலைக் கற்றுக் கொடுத்துள்ளேன். அவர்கள் இப்போது தனியாக வொர்க்ஷாப்புகளை நடத்தி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இளைஞர்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டும்'' என்று சொல்லும் சரவணனுக்கு வயது 27.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives