Monday 20 October 2014

'புதிய தலைமுறை' - Guindy Times

 

புதிய தலைமுறை

        சமீப காலமாக இந்தியாவைப் பார்க்கும் பார்வையும், குறிப்பாக இந்திய இளைஞர்கள் மீது எழுப்பப்படும் கேள்விகளும் சற்று குழப்பமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றன.

        சில மாதங்களுக்கு முன்பு அமீர்கானின் ‘PK’ பட விளம்பரம் ஒன்று சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருந்தது. அந்த விளம்பரத்தில் நிர்வாணமாகக் காட்சியளிப்பது போன்ற படம் இடம்பிடித்ததற்காக அமீர்கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதைக் கருவாகக் கொண்ட ஒரு யூடியூப் சேனல், டெல்லி மாநகரில் இளைஞர்களைக் கொண்டு சர்வே ஒன்றை நடத்தியது. பெரும்பாலான இளைஞர்கள் “இதில் என்ன தவறு?”, “இன்றைய வாழ்க்கை முறையைக் கலாச்சாரத்தோடு குழப்பிக்கொள்ளாதீர்கள்!” போன்ற சுவாரஸ்யமான பதில்களையும் கேள்விகளையும் எழுப்பினர். இவை போன்ற கேள்விகள், வித்தியாசமாக வாழ்க்கையை அணுகும் இன்றைய இளைஞர்கள் ஆகியவற்றைக் கண்டு நம் நாட்டின் மூத்த குடிமக்கள் சிறிது பயத்தில் இருக்கிறார்கள்.

        டிவியிலிருந்து ஸ்மார்ட் போன் வரை ‘ஸ்க்ரீன்’ இல்லாத தினசரி வாழ்க்கையை நம்மால் எண்ணிக்கூடப் பார்க்கமுடியாது. ‘டெக்னாலஜி அடிமைகள்’ என்ற அவப்பெயர் கூட. ஆனால் இதை வைத்து பொறுப்பே இல்லாமல் நாங்கள் இருக்கிறோம் என்று குறை சொல்லிவிட முடியாது. இன்றைய இளைஞர்களின் பொறுப்புகள் வேறுபட்டிருக்கின்றன. முந்தைய தலைமுறையோடு ஒப்பிட்டு பார்த்தால் பெரும் அளவில் அவை மாறுபட்டிருக்கின்றன. ஆனால் முந்தைய காலகட்டத்தோடு இன்றைய இளைஞர்கள் நாட்டுக்காகச் செய்ய வேண்டிய தொண்டுகளும் சேவைகளும் அதிகரித்த வண்ணமே தான் உள்ளது.

        நம் இந்திய நாட்டிற்காக இன்றைய இளைஞர்கள் பலர் தங்களது தெளிவான சிந்தனையாலும் புதுமையான அறிவாற்றலாலும் அவரவர் வழிகளில் பெரும் தொண்டாற்றி வருகின்றனர். கிட்டத்தட்ட 50% மக்கள் தொகையை முப்பது வயதிற்குக் கீழ் இளைஞர்களைக் கொண்ட நம் நாட்டைப் பார்த்து உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஆச்சரியப்படுகின்றனர்.
ஆனால் அதே சமயத்தில், “நாடு”, “தொண்டு”, “சமூதாயம்”, “சேவை” போன்ற வார்த்தைகளைக் கூடச் சில இளைஞர்கள் கசப்பாக நினைக்கிறார்கள். இவர்கள் நம் இந்திய நாட்டைத் திருத்த முடியாது என்ற வலிமையான நம்பிக்கையை உடையவர்களாகத் திகழ்கின்றனர்.

        ஆம். நமது நாட்டில் பல கோளாறுகள் இருக்கிறன. சட்டங்களில் பல ஓட்டைகள் இருக்கிறன. அரசியல் மற்றும் சமுதாயத்தில் பல கறைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். மொழி, இனம், மதம், சாதி போன்ற பல்வேறு பிரிவுகளைக் கொண்ட நம் நாட்டைப் போன்ற ஒன்றுபட்ட நாட்டை உலகின் எந்த மூலையிலும் காண முடியாது!

    கார்ப்பரேட் வாழ்க்கைகளும் காதல் திருமணங்களும் இந்த வேறுபாடுகளைப் பெருமளவில் நொறுக்கிக்கொண்டிருக்கும் நிலையில், நமது சீரான கல்வி முறைகளும் சிறந்த அறிவுகளும் நம் நாட்டின் தொழில்துறையைப் படிப்படியாக வளர்த்து வருகின்றது. மேலும் இன்றைய இளைஞன் ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட அரசியல் தலைவரையே நேரடியாக விவாதிக்கும் அளவிற்குத் தனது சமூகப் பொறுப்பை உணர்ந்திருக்கிறான்.

        குறைந்த விலையில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி உலகை பிரமிக்கவைத்தோம். இலக்கியம் முதல் சினிமாக்கள் வரை நமக்கான இடத்தையும் தரத்தையும் என்றோ உலகளவில் பிடித்துவிட்டோம். இங்கு மலாலாக்களுக்கும் மார்க் ஜக்கர்பெர்க்களுக்கும் பஞ்சமில்லை. 100 வருடங்களுக்கு முன்பே சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லப்பாய் படேல் போன்ற ஒப்பற்ற தலைவர்களைப் பார்த்த நாடு இது. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கலையிலும் அறிவியலிலும் முன்னின்ற ஒப்பற்ற பூமி இது.

        எண்ணற்ற வளங்களும் எண்ணிக்கையில்லா வாய்ப்புகளும் இயற்கையாகவே நம் நாட்டில் அமைந்திருக்கிறது. நம்மிடம் சீரான மன நிலையும் கொஞ்சம் தன்நலமற்ற உழைப்பு மட்டும் இருந்தால் போதும். நம் நாட்டை வளர்ச்சி பாதையில் வேகமாக எடுத்துச் செல்லாம். இனி விரல் நுனியில் இந்தியாவின் இளைஞன் உலகத்தை ஆளப்போகிறான்.
சக்தி வாய்ந்த இந்தியா தங்களை அன்புடன் வரவேற்கிறது.


- செ.கிஸோர் பிரசாத் கிரண், 
இயந்திரப் பொறியியல் – 4ஆம் ஆண்டு. 
(Mechanical Engineering – 4th year)

Link:
http://www.guindytimes.com/articles/puthiya-thalaimurai-tamil

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives