Friday 8 August 2014

Nalini Mother | நளினியின் தாயார் | Junior Vikatan | ஜூனியர் விகடன் (ஜு.வி)

அற்புதம்மாள் அளவுக்கு எனக்கு வீரம் இல்லை!

நளினியின் தாயார் உருக்கம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புதைந்திருக்கும் மர்மங்களை வெளிப்படுத்தும்
வகையில் புத்தகங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த
வகையில் புதுவரவு, வழக்கறிஞர் செ.துரைசாமி எழுதிய 'ராஜீவ் காந்தி
கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்’ என்ற புத்தகம்.
இவர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக
ஆரம்பத்தில் இருந்து ஆஜரானவர்.
 'விகடன் பிரசுர’த்தின் வெளியீடான இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா
கடந்த 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தின்
ஓய்வுபெற்ற நீதிபதியான கே.சந்துரு இந்தப் புத்தகத்தை வெளியிட,
முன்னாள் போலீஸ் எஸ்.பி-யான சக்திவேலும், ராஜீவ் கொலை வழக்கு
கைதியான நளினியின் தாய் பத்மாவும் இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டனர்.

பத்மாவிடம் பேசியபோது, ''எந்தத் தவறும் செய்யாதவள் 
என் மகள் நளினி. 22 ஆண்டுகளாக சிறையில் இருக்கும்
 என் மகளால், எங்கள் குடும்பத்தினர் அனைவரும்
மன உளைச்சலில் இருக்கிறார்கள். தன் மகனின்
விடுதலைக்காக பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள்
 இடையறாது போராடிக்கொண்டிருக்கிறார்.
அவர் வீரம் மிக்கவர். அவ்வளவு வீரம் எனக்கெல்லாம் இல்லை.
நளினி கர்ப்பமாக இருக்கும்போது வெள்ளைத் தாள்களைக் காட்டி பிளாக்மெயில் செய்து, செய்யாத குற்றங்களுக்கு அவளிடம் கையெழுத்து வாங்கிவிட்டார்கள். எந்தத் தவறுமே செய்யாத என் மகள்,
தன் கணவரைப் பிரிந்து, குழந்தைகளைப் பிரிந்து, சிறையில்
 சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறாள். நீதிமன்றம் என்னவோ அவள்
நலமாக, நிம்மதியாக இருப்பதாகக் கூறுகிறது. இதுபோன்ற நிலைமையில்
குழந்தையைப் பிரிந்து, கணவரைப் பிரிந்து எந்தத் தாயாவது நிம்மதியாக
இருக்க முடியுமா?! என் பேரக் குழந்தையைப் பார்த்து 10 வருடங்களுக்கு
மேல் ஆகிறது. அவர்கள் என் மருமகனின் உறவினர்களால்
வெளிநாட்டில் வளர்க்கப்படுகிறார்கள்.  
சென்னை ராயப்பேட்டையில் சாதாரண வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறேன்.
இந்தப் பிரச்னையால் வாடகைக்கு வீடு கொடுக்கக்கூட மறுக்கிறார்கள்.
இதற்கு அஞ்சியே ஊடகத்துக்கு என் முகத்தைக் காட்டுவது இல்லை.
ஏதோ ஒரு புண்ணியத்தில் யாரிடமும் கை கட்டாமல், கடன்
வாங்காமல் சொந்த உழைப்பை வைத்து என் வாழ்கையை நகர்த்தி வருகிறேன்.
உச்ச நீதிமன்றம் விரைவில் என் மகளோடு மற்றவர்களையும் விடுதலை
செய்ய வேண்டும். அவள் வருகைக்கு ஏங்கி நாங்கள்
தத்தளித்துக்கொண்டிருக்கிறோம்'' என்றார்.
இந்தத் தாயின் அழுகைச் சத்தம் உச்ச நீதிமன்றத்துக்குக் கேட்குமா?



- செ.கிஸோர் பிரசாத் கிரண்
படங்கள்: ஆ.முத்துக்குமார்

Link:

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives