Sunday 8 June 2014

ஃபேமிலி ஃபைனான்ஷியல் பிளானிங் | Family Financial Planning | Nanayam Vikatan | நாணயம் விகடன்

நிதியை மதியால் வெல்வோம்:ஆயுள் காப்பீடும்; மருத்துவக் காப்பீடும்!ஸ்ரீதரன் தலைமை நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.
ஒருவருக்குத் தேவையான அளவுக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பது குறித்து கடந்த இதழில் விளக்கமாகப் பார்த்தோம். இந்த வாரம், எந்தமாதிரியான இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இருக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்னென்ன என்பதைப் பற்றியும், மருத்துவக் காப்பீடு பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
ஆயுள் காப்பீட்டின் வகைகள்!
ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
1. டேர்ம் இன்ஷூரன்ஸ்.
2. எண்டோவ்மென்ட் அல்லது மணிபேக்.
3. யூலிப்.
இந்த மூன்று பாலிசிகளைப் பற்றியும் விளக்கமாகப் பார்ப்போம்.
டேர்ம் இன்ஷூரன்ஸ்!
இந்த வகையான பாலிசியின் மூலம் அதிக அளவிலான காப்பீட்டை குறைந்த பிரீமியத்தில் பெறமுடியும். உதாரணத்துக்கு, 30 வயதுள்ள நல்ல ஆரோக்கியமான ஆணுக்கு 30 வருடத்துக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீட்டுக்கு ஆண்டொன்றுக்கு சுமாராக ரூ.10,000 வரை பிரீமியம் கட்டவேண்டி இருக்கும். இந்த பாலிசி தொகையானது, பாலிசிதாரர் மரணமடைந்தால் கவரேஜ் தொகை அவரது குடும்பத்துக்குத் தரப்படும். இது ஒரு பாதுகாப்பு பாலிசி என்பதால், இதன் பிரீமியம் குறைவாக உள்ளது. இந்த வகையான பாலிசிகளில், பாலிசியின் காலம் முடிந்து, பாலிசிதாரர் உயிரோடு இருக்கும்பட்சத்தில் பாலிசிதாரர் பிரீமியமாகக் கட்டிய பணம் திரும்பக் கிடைக்காது.

எண்டோவ்மென்ட்!
இந்த வகையான பாலிசிகள், முதலீட்டு வகையைச் சேர்ந்தவை. இந்த பாலிசிகளில் கட்டும் பிரீமியத்தில் ஒருபங்கு காப்பீட்டுக்காகவும், மறுபங்கு முதலீட்டுக்காகவும் பிரித்து முதலீடு செய்யப்படும். பாலிசிதாரருக்கு ஏதேனும் உயிரிழப்பு நேரிட்டால், காப்பீட்டுத் தொகை அவரது
குடும்பத்தாருக்குச் சென்றடையும். இதுவே, பாலிசிதாரர் பாலிசி முடியும் வரை உயிரோடு இருந்தால், முதலீடு செய்த பணத்துடன், அதன்மூலம் வரும் லாபத்தையும் சேர்த்து பாலிசி தாரர்களிடம் தரப்படும்.
இந்த பாலிசிகளின் பிரீமியம் தொகை அதிகமாகவே இருக்கும். உதாரணமாக, 30-35 வயதுள்ள ஒருவர் 15 ஆண்டுகளுக்கு 1 லட்சம் ரூபாய் காப்பீடு எடுத்தால் குறைந்தபட்சமாக ரூ.5,000 முதல் 6,000 வரை ஆண்டு பிரீமியம் கட்டவேண்டி இருக்கும்.  தவிர, ஒவ்வொரு பாலிசியின் தன்மையும் வேறுவேறு மாதிரி இருக்கும்.
யூலிப்!

இந்த வகையான பாலிசிகளின் பிரீமியத்தில் ஒருபகுதியை, காப்பீட்டுக் காக ஒதுக்கிவைத்து, மீதமுள்ள பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதனால் வரும் வருமானம் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். இந்த வகையான பாலிசிகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால், ரிஸ்க் அதிகம். இந்த பாலிசிகளின் ஆரம்ப காலத்தில் பாலிசி சம்பந்தமான செலவு அதிகமாக இருப்பதால், முதலீட்டுக்கு மொத்த பாலிசியின் தொகையில் சிறிதளவே முதலீடு செய்யப்படும்.
ஆக, மேற்கூறிய அனைத்து பாலிசி களின் தன்மையும் வேறுபட்டு இருப்ப தால், அவரவர்களின் தேவைக்கேற்ப, அதற்குண்டான பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும்.
இனி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
மருத்துவக் காப்பீடு!
இன்றைக்கு ஒவ்வொருவரின் பட்ஜெட்டிலும் பற்றாக்குறை ஏற்படு வதற்கு மருத்துவச் செலவுகள் ஒரு முக்கிய காரணம். மேலும், தற்போதைய வாழ்க்கைமுறை மற்றும் உணவுப் பழக்கங்கள் மாறிவருவதால், பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தாக்கி வருகின்றன. இதைச் சமாளிக்க ஒவ்வொருவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியம். சிலர், நாங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி உண்டு. நாங்கள் தனியாக மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்க வேண்டுமா என்று கேட்கிறார்கள். வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து திடீரென விலகவேண்டிய சூழல்  ஏற்பட்டால், மருத்துவக் காப்பீட்டு பாலிசி இல்லாத நிலை உருவாகும். எனவே, தனியாக ஒரு மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுப்பது நல்லது.
மருத்துவ பாலிசி வகைகள்!
மருத்துவ பாலிசிகளைக் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்.
1. தனிநபர் பாலிசி
2. ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி
3. மூத்த குடிமக்கள் பாலிசி
4. சர்க்கரை நோய் பாலிசி
5. பெண்களுக்கான சிறப்பு பாலிசி
இந்த பாலிசிகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.
1. தனி நபர் பாலிசி!
இது தனிநபருக்கு உகந்த பாலிசி. திருமணமாகாதவர், இந்த பாலிசியை எடுத்துக்கொண்டு, திருமணமானவுடன் தங்கள் கணவரையோ/மனைவியையோ சேர்த்துக்கொள்ளலாம்.
2. ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி!
திருமணமானவர்கள், தங்கள் மனைவி, குழந்தைகளையும் மற்றும் திருமணமாகாதவர்கள் அவர்களது பெற்றோரையும் சேர்த்துக்கொண்டு பாலிசி எடுத்துக்கொள்ளலாம். இந்த வகையான பாலிசிகளின் பிரீமியம், தனிநபர் பாலிசிகளைவிட குறைவாகவே இருக்கும். மேலும், இந்த வகையான பாலிசிகளை எடுக்கும்போது பெற்றோரின் வயது 60-க்கும் மேற்பட்டதாக இருக்குமேயானால், மூத்த குடிமக்களுக்குண்டான பாலிசி எடுப்பதே சிறந்தாகும்.
3. மூத்த குடிமக்கள் பாலிசி!
இந்த பாலிசிகள் 60 வயதுக்கு மேற்பட்டவருக்கான சிறப்பு பாலிசி ஆகும். இந்த பாலிசிகளிலும் ஃப்ளோட்டர் வகை உண்டு. ஆனால், தனிநபரின் பாலிசி பிரீமியமோ அல்லது சிறிது குறைவாகவோ இருக்கும். ஆகவே, மூத்த குடிமக்கள், தனிநபர் பாலிசி எடுப்பதே சிறந்தது. மேலும், ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தனிநபர் பாலிசியாக மட்டுமே மூத்த குடிமக்கள் பாலிசிகளை வழங்குகின்றன.
4. சர்க்கரை நோய் பாலிசி!
ஒரு சில வருடங்களுக்குமுன், சர்க்கரை நோய் இருப்பவர், மருத்துவ பாலிசிகளை எடுக்கமுடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால், தற்போது ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான சிறப்பு பாலிசிகளை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளன.
ஒரு சில பாலிசிகள் டைப் 1 சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டுமே எடுக்க முடியும். ஒரு சில பாலிசிகள் இரண்டு வகை சர்க்கரை நோய் (டைப் 1, டைப் 2) உள்ளவர்களும் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, உங்களின் சர்க்கரை நோயின் தன்மையைப் பொறுத்து, அதற்கு எந்த இன்ஷூரன்ஸ் கம்பெனியில் கவரேஜ் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு அந்த பாலிசிகளை எடுக்க வேண்டும்.
5. பெண்களுக்கான சிறப்பு பாலிசி!
பெண்களுக்கே உரித்தான (மகப்பேறு, கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் வேறு சில நோய்களை கவர் செய்யும் வகையில்) சில பாலிசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகையால், சாதாரண ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியைத் தவிர, இந்த வகையான பெண்களுக்குண்டான சிறப்பு பாலிசி எடுப்பது மிகவும் நல்லது.
(திட்டமிடுவோம்)
படங்கள்:  அ.ஜெஃப்ரி தேவ்.

''சேமிக்கத் தவறுவதில்லை!'
ஸ்வப்னா சுந்தர், சென்னை.
''என் கணவர் மாதத்துக்கு ரூ.1.5 லட்சம் சம்பாதிக்கிறார். வீட்டு வாடகை முதல் குழந்தைகளுக்கான இந்தி டியூஷன் ஃபீஸ் வரை அனைத்து செலவுகளும் போக, மாதந்தோறும் இருபதாயிரம் ரூபாய் சேமித்துவிடுவோம். ஏதாவது, அவசர செலவு வந்தால் மட்டுமே இந்தச் சேமிப்பில் கைவைப்போம். தவிர, எங்கள் இரண்டு குழந்தைகளுக்கும் தலா இரண்டாயிரம் ரூபாயை ஆர்.டி கணக்கில் சேமிப்போம். இது அவர்களுக்கான எதிர்கால செலவுக்கான சேமிப்பு. எங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்காகவும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறோம்.
இதுதவிர,என் மகளுக்கு தேவையான நகைகளை வாங்க இரண்டாயிரம் ரூபாயை மாதந்தோறும் சீட்டு மூலம் சேமித்து வருகிறோம். வருடந்தோறும் சுற்றுலா செல்வதற்கு சேமித்து வருகிறோம்.'
செ.கிஸோர் பிரசாத் கிரண்.

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Social

Search

Popular Posts

Views

Archives